Wednesday 22 July 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 3

22-June. Monday. கோவளம் கிளம்பினோம். நாகர்கோவிலில் இருந்து இரண்டு மணிநேர டிரைவ்.திருவனந்தபுரம் போகும் வழியில் பாலராமபுரம் (மலையாளிகள் பால்ரா என்று சொல்கிறார்கள்) என்னும் ஊரில் இருந்து கோவளத்துக்கு வழி பிரிகிறது. ஆனால் போகும் போது அந்த வழியை மிஸ் பண்ணி, நேரே திருவனந்தபுரம் போய்ட்டோம். அப்றோம் அங்கிருந்து இருபது நிமிட டிரைவ்.


கோவளம் பீச் ஒரு பிரைவேட் பீச் கணக்கா இருக்கு. வெகு சுத்தம்.கூட்டம் கம்மி.
அலை அதிகம். யாராவது மாட்டிகொண்டால் மீட்பதற்கு செக்யூரிட்டி ஆட்கள் அங்கேயே இருக்காங்க. 'நானெல்லாம் தண்ணில வர மாட்டேன்.வேணும்னா கால் மட்டும் லேசா நனைக்குறேன்' இப்டி சொல்லி ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமா உள்ள போய், ஒரு பெரிய அலையில் தடுமாறி கடலில் விழுந்தேன்.
(இனிமே கடலில் குளித்து இருக்கிறீர்களா என்று கொக்கிகாய்ச்சல் கேள்வி வந்தா, ஆமா ன்னு answer பண்லாம்.) விழுந்த என்னை அப்டியே அலை இழுத்துக்கொண்டு போக, என்னை கைபிடித்தவர் கை கொடுத்து தூக்கி விட்ட படி,

'உன்னை அப்டியே விட்டுட்டு அர்ஜுன் க்கு வேற நல்ல அம்மா ரெடி பண்ணிருக்கலாம்'.

'அட பாவமே அந்த கஷ்டம் இன்னொரு பொண்ணுக்கு வேணாம்'

பெரியவர்கள் குழந்தைகள் யாரையும் கூட்டி போகாமல் கதிரும் நானும் மட்டும் போனதால், கேட்க ஆளில்லை, நம்மள கேட்பதற்கும் இல்லை , நாம கேட்பதற்கும் இல்லை. ஒரு மணி நேரம் கடலில் ஆட்டம். ஊர் திரும்பி, 'களியன்காடு' சிவன்கோயில் விசிட். கதிரின் பெரிய மாமா அங்கே திருவாசகம் பிரசங்கம் செய்வார். 'இங்க முன்னால் ஒரு ஐந்து கால் காளை இருந்துச்சு, அது என்னை பாத்தா வணக்கம் சொல்லும்(?)' ன்னு சொல்றார். ரொம்ப பெரியவர். எனக்கும் கதிருக்கும் திருமணம் நடத்தி வைத்தவர். அதனால "காளை எப்டி பேசும்?" ன்னு எல்லாம் அவர் கிட்ட அபத்தமா கேள்வி கேக்காம தலைய ஆட்டி வெச்சேன்.
அன்று இரவு 'இரவிப்புதூரில்' கதிரோட பெரியம்மா வீட்டில் தங்கிட்டோம்.
zzzzzzzzzzzz.

Tuesday.
மருங்கூர் - இரவிபுதூரில் இருந்து வெகு அருகில் இருக்கும் மலை, மேல முருகன்.
காலையில் எழுந்து கிளம்பி, அர்ஜுனை கிளப்பி, மூச்சிரைக்க மலை மேல ஏறி கோவிலுக்குள் நுழைய முயற்சிக்கும் போது சரியாக மணி பத்து. "இப்போ தான் நடை சாத்திட்டோம்" என்றார்கள். 'திருப்பரங்குன்றத்தில் என்னை பாக்காமலா போனீங்க?' முருகன் கேட்காமல் கேட்டார். "To me, you are everywhere' ன்னு சாத்தின கதவை பாத்து கும்பிட்டுட்டு, கோவிலை சுத்தி வந்தோம்.

'இந்திரனுக்கு சுசீந்திரத்தில் விமோசனம் கிடைத்ததும், இந்திரனுடைய குதிரை 'உச்சைச்ரவா' தனக்கும் விமோசனம் வேண்டியதாகவும், சிவன் 'நீ என் புள்ள கிட்ட போய் கேட்டுக்கோ' என்று சொல்லிட்டதாகவும், அந்த குதிரைக்கு முருகன் விமோசனம் குடுத்த இடம் தான் மருங்கூர் (மருங்கு - குதிரை) என்றும் எழுதி வைத்து இருக்கிறார்கள்.'

சூரசம்கார திருவிழா நடக்கும் இடம் என்று கோவிலுக்கு பின்னால் காண்பித்தார்கள். அங்கே இருந்து கீழ பார்த்தால் கண்ணுக்கு எட்டின வரை தென்னை மரம் தான்.Good view. இப்டி ஊரு முழுக்க தென்னை மரத்தோட வளர்ந்ததுனால தான், சாப்பிடற எல்லாத்துலையும் தேங்காய் அரைச்சு ஊத்தி போட்டு தாக்குறாங்க போல. அட மோரை கூட விடறது இல்ல. அதுல தேங்காய் சீரகம் பச்சமிளகாய் இஞ்சி வெச்சு அரைச்சு புளிச்சேரி.(எங்க அம்மா வீட்டு மோர்குழம்பு கிட்ட தட்ட)

மாங்குளம் - மாமனாரின் குடும்ப கோவில். முத்தாரம்மன். ஒரு பகுத்தறிவுவாதி குடும்பத்தாரின் விருப்பத்திற்காக குலதெய்வம் கோவிலுக்கு போனால், பகுத்தறிவுக்கு பங்கம் வராதாமே? (..:-) :-) smiley போடாம இருக்க முடியலை) '
ஆனால் என் மாமனார் கோவிலுக்கு உள்ள வரலை, 'எனக்கு விவரம் தெரிஞ்சு இப்போ தான் இங்க வரேன்னு' சொல்லிட்டு எங்களை உள்ள அனுப்பிட்டு வெளில உக்காந்து கொண்டார்.
'நானும் கல்யாணம் ஆனதிலேர்ந்து இங்க வந்ததுல்லை.அர்ஜுன் சாக்கு வெச்சு வந்துட்டேன்' - மாமியார்.

அங்கிருந்து நல்லூர். கதிரின் சொந்த ஊரு. பார்க் பண்ற இடத்தில் மடேர்னு இடிச்சு காரில் ஒரு பெரிய dent. ஊர் நினைவாக ஏதாவது வேண்டாமா பின்ன? கதிரோட அத்தை வீட்டில் லஞ்ச். ஒரு குட்டி தூக்கம். சாயங்காலம் இந்த பயணத்தின் most awaited destination. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்.

கோவிலை முழுசா சுத்தி பாக்க ஒரு நாலு மணி நேரம் வேணும். ஆனால் கதிர் குடுத்த டைம் one hour. 'சுத்தி எல்லாம் பின்னொரு நாள் பாக்கலாம், இப்போதைக்கு சாமி மாத்திரம் பாத்துக்கோ', என்று சொல்லி எங்களை(நான், மாமியார், கதிரோட அத்தை பெண், அர்ஜுன்) அனுப்பிச்சுட்டு மாமனாரும் கதிரும் எஸ்கேப். கோவிலில் ஆண்கள் சட்டை அணிந்து வரக்கூடாது என்றெல்லாம் சட்ட திட்டம் இருக்கிறது.

முதலில் ஒரு மரத்தடியில் மூலவர் சந்நிதி. ஆரத்தி பார்த்துட்டு, உள்ளே இன்னுமொரு சந்நிதி. தாண் மால் அயன் என்று மூவரையும் differentiate பண்ண முடியாமல் குழம்பிட்டேன். அங்கே ஒரு அர்ச்சகரிடம் போய், 'கொஞ்சம் எனக்கு தல வரலாறு சொல்லுங்க, அப்டியே மூலவர் சந்நிதில யாரு எங்க இருக்காங்கன்னு கரெக்டா காட்டுங்க, உள்ள இருக்க சந்நிதில லிங்கம் மட்டும் தான் தெரியறது, மத்த ரெண்டு பேரும் எங்க?' - என் மாமியார் சற்று அதிர்ந்து போய்ட்டார். 'அட, கதிருக்கு வாய்ச்சுருக்க பொண்டாட்டிய பாரு' - அவரோட அத்தை பெண்.

அர்ச்சகர் வெகு உற்சாகமா விளக்கினார்.(இந்த கோவிலை பற்றி இணையத்தில் பெரியவர்கள் நிறையா எழுதிட்டாங்க.ஆனாலும் நான் கேட்டதை நான் எழுதுவேன் என் டைரி குறிப்புக்காக)
'இந்த மரம் கொன்றை மரம், இதற்கு கீழே இருக்கிறது மூன்றும் சுயம்பு லிங்கம். ஒன்று சிவன், ஒன்று விஷ்ணு, ஒன்று பிரம்மா, அதுனால இந்த மூலவருக்கு கொன்றையடி தாணுமாலயன்னு பேர். காலையில் நாலரை மணிக்கு பூஜை அப்போ மட்டும் தான் லிங்கங்களை பார்க்க முடியும், அதற்கு அப்றோம் முகங்களை பிரதிஷ்டை பண்ணிடுவோம், உள்ளே சன்னதில நீங்க பார்த்தது ஒரே லிங்கம். அந்த லிங்கம் பிரம்மாவாகவும், லிங்கத்தின் தலையில் இருக்கும் பிறை சிவனாகவும், மேலே இருக்கும் பாம்பு விஷ்ணுவாகவும் இருப்பதாக ஐதீகம். சுசீந்திரம் என்பது இந்திரனுக்கு மோட்சம் அளித்த இடம் என்பதால் வந்த பெயர்" .
ரொம்ப நன்றி ன்னு சொல்லிட்டு இன்னும் உள்ளே போனோம்.
விஷ்ணு மல்லாக்க படுத்த நிலையில் ஒரு சிலை. மறுபடி குழப்பம். ஒருக்களித்து படுப்பாருனுல்ல நெனச்சேன்? பிறகு தான் தெரிந்தது. அவர் படுத்த நிலையில் இருபத்தேழு விதமான போஸ் இருக்காம்.

இதோ வந்தாச்சு. பயணம் தொடங்கியதில் இருந்து 'இந்த இடத்தை எப்டி சமாளிக்க போகிறோம்' என்று படபடப்பாகவே இருந்த இடம்.அழுது தொலைக்க கூடாது என்று ஏகத்துக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டி இருந்த இடம். சுசீந்திரம் ஆஞ்சநேயர் சந்நிதி. பிரம்மாண்டமா,ஆனா சாந்தமா,உடல் முழுக்க செந்தூரம் பூசிக்கிட்டு, பாதம் வரை தொங்கும் வெற்றிலை மாலையும், வடை மாலையுமாக, ஸ்ரீ ராமன் சந்நிதியை பார்த்தவாறு கைகூப்பி நிற்கும் ஆஞ்சநேயரை விட்டு கிளம்ப மனமில்லாமல் போனதற்கு அவர் அவ்ளோ அழகா இருந்தது மட்டும் காரணம் இல்லை.
சுசீந்திரம் கோயில் என் அப்பாவுடன் நான் போன கடைசி இடம். அதுவும் இதே ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்த தான்.

- இன்னும் பயணம் (திற்பரப்பு, பத்மநாபபுரம்)

No comments:

Post a Comment