Thursday, 30 April 2009

கண்ணால் காண்பதும் பொய்.




முன்குறிப்பு: சங்கமம் போட்டிக்கு எழுதியது.
"உதை ஒண்ணு தான் பாக்கி" range ல எதாவது கெடைத்தால், என்னை நம்பும் இருபத்து நாலு பேருக்கும் பகிர்ந்து தரப்படும்.



கண்ணால் காண்பதும் பொய்.
வெள்ளை போர்டில், கருப்பு நிற பெயின்டில் 29 என்று நம்பர் போட்டு ஒரு பக்கம் "கீரமங்கலம்" என்றும் இன்னொரு பக்கம் "பட்டுக்கோட்டை" என்றும் எழுதப்பட்டிருக்க அந்த பச்சைக் கலர் பேருந்து வந்து நின்றது. பின்பக்க படி வழியாக ஏறி படிக்கு நேரா இருக்கிற சீட்டுல வசதியாக அமர்ந்தேன். ஒரு பாட்டி ஏற்கனவே ஜன்னலோர சீட்டில் நன்கு தூங்கிக்கொண்டு இருந்தார்.

"எங்க போணும்?" கண்டக்டரை பார்க்க அசப்பில் ராஜ்கிரண் சாயலில் இருந்தார். பான்பராக் பற்கள். uniform ஏகத்துக்கு கசங்கி, கண்கள் செவ செவ என்று தி மு க கொடியை ஞாபகப்படுத்தின.

"திருச்சிற்றம்பலம்"
"13 ரூபா சில்லறையா குடும்மா."

பையில் துழாவி துழாவி பார்த்ததில், ஒரு பத்து ருபாய், ஒரு ரெண்டு ரூபாய், ஒரு அம்பது ருபாய், என்று பல்லை இளித்தன. பயந்து கொண்டே தான் அந்த அம்பது ரூபாயை எடுத்து நீட்டினேன்.

"3 ரூபா சில்லறை இருக்கா?"
"இல்லை, ரெண்டு ரூபாய் தான் இருக்கு"

"காலங்கார்த்தால ஆளாளுக்கு இப்படி முழு ரூபாய நீட்டினா நான் எங்க போறது சில்லறைக்கு?" சிடுசிடுத்தார்.
காலையில் அவசரத்தில், சில்லறை எடுக்காமல் வந்தது என் தப்பு தான். அமைதி காத்தேன். டிக்கெட்க்கு பின்னால் 37 என்று எழுதிக் கொடுத்தார்.

சனிக்கிழமை காலைநேரம் என்ற போதும், சுபமுகூர்த்த நாள் என்பதால் பேருந்தில் கணிசமாக ஆட்கள்.தேவைக்கு அதிகமான சத்தத்தில் FM ரேடியோ.

எனக்கு முன் பக்க சீட்டுல ஒரு ஆணும் பெண்ணும்.
கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆன தம்பதிகளாக இருக்க வேண்டும். ஆளுக்கு ஒரு பக்கம் மூஞ்சிய திருப்பி வைத்து இருந்தார்கள்.

ரேடியோவில் "உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல??"

கண்டக்டர் சீட்டுக்கு முன் சீட்டுல இரு சிறுமிகள்.ஒரு சிறுமி இன்னொன்றிடம் ஜன்னலோர சீட்டுக்காக கெஞ்சிக் கொண்டு இருந்தது. அதற்கு முன் சீட்டில், ஒரு ஆள். மண்டையை அநியாயத்துக்கு ஆட்டிக்கொண்டு இருந்தார். பாட்டை ரசிக்கிறாராம்.

"காசிம்புதுப்பேட்டை எறங்கு" கண்டக்டர் எனக்கு நேராக இருந்த அவருடைய சீட்டில் வந்து உக்காந்து கொண்டே கூவினார்.

முன்சீட்டு பெண் பொறுமையாக எழுந்தார்."வெரசா எறங்கு ம்ம்..."கண்டக்டர் ஏக வசனத்தில் விரட்டவும்,"stopping வர்றதுக்கு முன்னாடியே எந்திரின்னு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்" அந்த கணவன் கடிந்து கொள்ள, மனைவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே, இறங்கினார்கள்.

"போலாம் ரைட்"

ஒரு ஆறு-ஏழடி தொலைவில், ஒருவர், வயசானவரைப் போலிருந்தார். பழுப்பான வேட்டி சட்டையும், கலைந்த தலையும், ஒரு கைல மஞ்ச பையுமாக, பஸ்ஸை நிறுத்த சொல்லி கையை ஆட்டி கொண்டு ஓடி வந்ததை கண்டக்டர் பார்த்தாரா தெரியலை.


ரேடியோவில் நாக்க முக்க.
டிரைவர் சவுண்டைக் கூட்டி வைத்தார்.
"கொஞ்சம் நிறுத்துங்க, அங்க ஒருத்தர் ஓடி வர்றார்" சத்தமாக கத்தி விட்டேன் போல.பாட்டியிடம் லேசான சலனம்.ஆனால் முழிக்கலை.முன் சீட் ஆள், மண்டைய ஆட்டுவதை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தார். கண்டக்டர் கண்டுக்கவே இல்ல. லேசான அவமானம், அந்த பெரியவருக்காக பச்சாதாபம் எல்லாமாக, நாக்க முக்க வேறு சூழ்நிலைக்கு பொருத்தமில்லாமல் படுத்த, கண்களை மூடிக்கொண்டேன்.
'ச்சே, ஒரு பத்து வினாடி தாமதித்து இருந்தால் கூட ஏறி இருப்பார்'

திருச்சிற்றம்பலம் கோவிலில் தோழி ஒருத்திக்கு கல்யாணம். எட்டாவது வரை கூட படித்தவள். தாய் மாமாவுக்கே கொடுக்கிறார்கள். "மேக்கப் போடும் போது நீ கூட இருக்கணும்" என்று சொல்லி இருந்தாள்.

ரேடியோ வில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய பொண்ணு, "நான் கெளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சு" ன்னு டாட்டா சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

முன் சீட் ஆள் எழுந்து பின் பக்க படி கிட்ட வந்து நின்னுக்கிட்டார். அடுத்து 'செருவாவிடுதி' ஸ்டாப் எறங்க வேண்டியவராய் இருக்கும்.என்னை கடந்து போகும் போக்கில், என்னை ஏளனமாய் பார்த்த மாதிரி இருந்தது. டிரைவர் வண்டிய நிறுத்தவே தேவை இல்லாமல், வேகத்தை குறைக்கும் போதே, இறங்கினார்.

ஸ்டாப்பிலும் ஏறுவதற்கு யாரும் இல்லாமல் போகவே, பஸ் அப்டியே கெளம்ப ஆரம்பிக்க,
"ஓல்டேன்" - கண்டக்டர். அதாவது Hold On.

டிரைவர் ப்ரேக் போட, முன் சீட்டு சிறுமிகளில் ஒன்று கம்பியில் லேசாக முட்டி கொண்டது.எதுக்கு ஹோல்ட் ஆன் என்று புரியாமல், சுத்தி முத்தி பாத்தேன். ஒரு இருபது அடி தூரத்தில் ஒருவர் கையை ஆட்டியபடி பஸ்சை நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்தார். 'அவருக்காகவா ஹோல்ட் ஆன் ??' என்று ஆச்சர்யமாக இருந்தது.
ஓடி வந்து பின்படியில் ஏறி கண்டக்டரை பார்த்து நன்றியுடன் புன்னகைத்த அவனுக்கு மிஞ்சி போனால் பதினெட்டு தாண்டாது, டிப்டாப்பாக உடுத்தி இருந்தான்.
எனக்கு பற்றிக்கொண்டு வந்தது. "அந்த பெரியவருக்கு ஒரு நியாயம். இவனுக்கு ஒரு நியாயமா???" என்று கேட்க நினைத்த என்னை,
'போன டிசம்பர் மாசம் ஒரு நாள் மாலை, சிகரெட் பிடித்த படி பஸ் ஓட்டிய, ஓட்டுனரிடம் நான் சட்டம் பேச போய், அவருடன் வாக்குவாதம் முற்றி நடுவழியில் இறங்கி, குளிரில் நடுங்கி கொண்டு அடுத்த பஸ்சுக்கு நிக்க வேண்டியதாகி போனது' ஞாபகம் வந்து பயமுறுத்தியது.

ரேடியோவில் சமையல் குறிப்பு, ரசமலாய் எப்டி செய்ய வேண்டும் என்று ஒரு அம்மணி பிராமண பாஷையில் சொல்லிக்கொண்டு இருந்தார்.

பஸ் வளைவில் திரும்பும் போதே, திருச்சிற்றம்பலம் கோயில் கோபுரம் தெரியவே, ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ள, எழுந்து கொண்டேன். அந்த இன்ஸ்டன்ட் உற்சாகம் கொடுத்த பலத்தில் கேட்டே விட்டேன், சற்று சூடான குரலில்.
"காசிம்புதுப்பேட்டையிலும் கொஞ்சம் நிறுத்தி அந்த பெரியவரை ஏற்றிக்கொண்டு இருக்கலாம் இல்ல? செருவாவிடுதில அந்த பையனுக்கு மட்டும் நிறுத்தினீங்க?"

'உன் அப்பன் வீட்டு பஸ்சா ? பேசாம எறங்குற வழிய பாரு' இப்டி ஒரு பதிலை தான் எதிர்பார்த்தேன். என்ன சொன்னாலும் சொல்லட்டும், கேக்காம எறங்கினா, கல்யாண சாப்பாடு செரிக்காது.

"ஓ, அதுவா? காசிம்புதுப்பேட்டைல கண்டிப்பா எல்லா பஸ்சும் நிக்கணும். பெரிசுக்கு அடுத்த அஞ்சாவது நிமிஷம் அடுத்த வண்டி வந்துடும். ஆனா செருவாவிடுதில வெள்ளை போர்டு பஸ் மட்டும் தான் நிறுத்துவோம். இன்னைக்கு சனிக்கிழமை வேற. அந்த பையனுக்கு இந்த பஸ் விட்டா அடுத்த அரை மணி நேரத்துக்கு பஸ் கெடைக்காது. அதான்" சொல்லிக்கொண்டே பையிலும்,சட்டை பாக்கெட்டிலுமாக தேடி முப்பத்தேழு ரூபாய் எண்ணிக்கொடுத்தார்.

என் பஸ் ஸ்டாப்பில் இறங்கினேன்.

"போலாம் ரைட்"



Tuesday, 28 April 2009

சில கேள்விகள்.

பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். இதை விட நல்ல கேள்விகள் இருந்தாலும் அனுப்புங்கள்.
கூகிள் பண்ண கூடாதுன்னு எந்த விதி முறையும் இல்லை:-)
பின்னூட்டங்கள் பிறகு பிரசுரிக்கப் படும்.
பரிசாக புத்தகம், CD ஏதும் அனுப்பி வைக்க மாட்டேன்.




1.அயன் படம் பாத்துட்டீங்களா? அட இது கேள்வி இல்லை.
"அயன்" அப்டின்னா உண்மையான அர்த்தம் என்ன? "சூர்யா" என்ற பதிலும், அந்த படத்தின் டைரக்டர் சொன்ன மாதிரி "பலம் பொருந்தியவன்" அப்டின்னு உதார் விடுற அர்த்தமும், தப்பு என்று இப்போவே சொல்லிக்கறேன்.

மகாபாரதம் படித்து/பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து சில கேள்விகள்.

2.பீஷ்மரின் இயற்பெயர் என்ன? "முகேஷ்" என்ற பதில் செல்லாது.

3.ஊர்வசியின் சாபத்தால் அர்ஜுனன் பெண்தன்மையை அடைந்து விடுகிறான். அப்டியா என்று கேட்பவர்கள் அடுத்த கேள்விக்கு போய் விடலாம். அப்போ
அவன்(ள்), எந்த பெயரால் அழைக்க படுகிறான்(ள்)?

4.பாண்டுவின் இரண்டாவது மனைவி பெயர் என்ன? (நல்ல வேளை, இவராவது அண்ணன் மாதிரி ஆட்டம் போடாம , ரெண்டோட நிறுத்தினாரு)

5.கடோத்கஜனோட அப்பா பேர் எல்லாருக்கும் தெரியும் ன்னு நம்பறேன். அம்மா பேர் என்ன??

6.துரோணரின் மகன் பெயர் என்ன?இது ரொம்ப சுலபமான கேள்வி தான், ஆனாலும் ஒரு குட்டி க்ளூ. மகாபாரதத்தில் ஒரு யானைக்கும் அதே பெயர் உண்டு.










Friday, 3 April 2009

பாரதிதாசனாரை தலைப்பில் வைத்து கொண்டு இப்டி புலம்பி இருப்பது பெண்ணீய துரோகம் என்று பெண்ணீயவாதிகளிடம் இருந்து என்று கடும் எதிர்ப்பு கிளம்பியதால், முந்தைய பதிவு நீக்க பட்டது.(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொசு தொல்லை தாங்க முடியலைப்பா!!!)
படிக்காதவர்கள் பிழைத்தீர்கள்.
:-)