Monday, 23 November 2009

நாஞ்சில் நாட்டு வானவில்

பெங்களூரில் இருந்து போகும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்க நினைப்பதை விட, அந்த ரயில் போகும் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக்கொள்வதே மேல்.மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெர்த் சைசில் முக்கால் வாசி தான் இருக்கிறது இந்த ரயிலின் பெர்த்கள். உங்கள் பெட்டியில் முறுக்கு, பிஸ்கட் இத்யாதிகள் வைத்து இருந்தீர்களே ஆனால்,செலவை பார்க்காமல் ஒரு பூனைக்கும் டிக்கெட் போட்டு கையோடு கூட்டி போய்விடுதல் நலம். 'விதௌட்'டில் சுதந்திரமாக ஓடி கொண்டு இருக்கின்றன எலிகள். அவை தின்றது போக மீதி தான் உங்களுக்கு மிஞ்சும்.பையை தலைக்கு வைக்காமல் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு தூங்கி விடுவதில் ஒரு சௌகர்யம் இருக்கிறது.மறு நாளில் இருந்து பையை திறக்க ஜிப்பை எல்லாம் இழுத்து சிரமப்படவே வேண்டாம். ஒரு கையை நுழைத்து உள்ளே உள்ள பொருட்களை எடுக்கும் அளவுக்கு ஓட்டை போட்டு தரும் நல்ல மனசுக்கார எலிகள்.
உங்களுக்கு "multiple personality disorder " இருக்கிறதா என்று கண்டு பிடிக்க வேண்டுமா? டாக்டர் checkupக்கு எல்லாம் செலவு செய்ய வேண்டாம். இந்த ட்ரெயினில் இருக்கும் டாய்லெட்டுக்குள் ஒரு முறை நுழையவும்.ஒரு வேளை நீங்கள்
"T T RRRRRRRRRRRRRRRRRRRR" என்று கத்தினால் உங்களுக்கு MPD confirmed.

காலை ஏழு மணிக்கு மதுரை போக வேண்டிய ரயில் சற்று தாமதமாகி ஒரு எட்டு எட்டரைக்கு போய் சேரும். அதற்குள் அவசரப்பட்டு எலி மிச்சம் வைத்த பிரட் ஏதும் சாப்பிட்டு விடாதீர்கள். மதுரை சந்திப்பில், "மீனாக்ஷி பவன்" என்று எழுதிய பச்சை கலர் அட்டை பொட்டியில், சுட சுட பொங்கல், பூரி, இட்லி எல்லாம் கிடைக்கிறது.20Rs/பொட்டி.பசியா ருசியா என்று தெரிய வில்லை. நல்லாவே இருந்தது.

வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் வருகைக்காக திருநெல்வேலி வரை செல்லும் 'லிங்க் ட்ரெயின்' காத்து கொண்டு இருக்கிறது. போன ஜென்மத்தில் உங்களுக்கு "வருண" தோஷம் ஏதும் இருந்தால், மழை கூட 'நீங்கள் மணியாச்சியில் வந்து இறங்கியதும் பெய்யலாம்' என்று காத்து கொண்டு இருக்கும். 'ஆஷ் துரையை', வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற வீர வரலாற்றுக்கு இன்றும் மௌன சாட்சியாய் இந்த ஸ்டேஷன்.

திருநெல்வேலி சந்திப்பில் இறங்கி வெளியே வந்ததும் ஷேர் ஆட்டோகாரர்கள் நம்மை மொய்க்கிறார்கள். 'புது busstand போக வேண்டும்' என்று சொன்னதும் 'நூறு ரூபாய்' என்று ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அறுபது ரூபாய்க்கு ஓகே சொல்கிறார்கள். "அல்வா வாங்கணுமா சார்?" என்று கேட்டு அவர்களே ஸ்வீட் கடை முனனால் நிறுத்துகிறார்கள். luggage அதிகம் இல்லையென்றால் ரயில் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடந்து சென்று (அதிக தூரமில்லை, ஐந்து நிமிட நடை தான்), அங்கிருந்து பஸ்ஸில் செல்லலாம். கிட்ட தட்ட ஆறு கிலோமீட்டர் ஆட்டோவில் போனால், புது busstand , நாகர்கோவிலுக்கு நிறைய பேருந்துகள் நிற்கின்றன. End To End bus என்றால், நெல்லையில் புறப்பட்டு நாகர்கோவிலில் தான் நிற்குமாம். ஆனால் அந்த பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் தான் இருக்கின்றன. மற்ற பேருந்துகள் எல்லாம் 'பாயிண்ட் டு பாயிண்ட்' என்ற போர்டுடன் எல்லா பாயிண்டிலும் நின்று நின்று போகின்றன.

இந்த முறை கல்யாண வீட்டை தவிர சென்ற ஒரே இடம் "நாகராஜா கோவில்". நாகர்கோவில் என்ற ஊரின் பெயர்க்காரணமே இந்த கோவில் தானாம். கருங்கல்லால் கட்டி இருக்கும் கோவிலில் முடிந்த வரை எந்த நவ நாகரிகமும் புகுந்து பழைமை மா(ற்)றிவிடாமல் காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள். மூலவர் நாகராஜர், சிவன், அனந்த கிருஷ்ணன் இருவருக்கும் சன்னதிகள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான இடம். ஆண்கள் சட்டை அணிந்து வர அனுமதி இல்லை.

முடிந்தால் ஒரு கார்த்திகை மாத காலை நேரத்தில் கோட்டார், சுசீந்திரம், நல்லூர், மருங்கூர், இரவிப்புதூர் என்று நாகர்கோவிலில் சுற்றுப்புறங்களை பைக்கில் ஒரு ரவுண்டு சுற்றுங்கள். ஆறு,குளம் என தாமரை மலர்ந்து, நிரம்பி வழியும் நீர்நிலைகள், பைக்கை நிறுத்தி நிறுத்தி உங்களை அங்கங்கே இறங்க வைக்கும்.அப்போது தான் பிரித்து நட்டு வைத்திருக்கும் நெல் நாற்றுகள் தலையை ஆட்டி ஆட்டி வணக்கம் வைக்கும். கொக்கு போல இருக்கும்,ஆனால், அலகு சிறியதான வெண்ணிற பறவைகள் கூட்டம் வயல் முழுக்க மேய்ந்து கொண்டு இருக்கும்.தென்னந்தோப்புகள் காய்த்து குலுங்கிக்கொண்டு இருக்கும்.எதற்கும் கிளம்பும் போதே வீட்டில் 'நேரமாகும்' என்று ஒரு வார்த்தை போட்டு வைத்து விடுங்கள். இதையெல்லாம் ரசித்து முடிந்து வீடு போய் சேர்வதற்குள், மொத்த குடும்பமும், 'என்ன இவ்வளவு நேரம்' என்று மொத்துவதை தவிர்க்கலாம். யாராவது செவ்வாழைபழம் சாப்பிட கொடுத்தால், "ரொம்ப பெரிசா இருக்கு, பாதி போதும்" என்று சொல்லிவிடும் தப்பை மட்டும் செய்யவே செய்து விடாதீர்கள். பழத்தில் ஒரு துண்டு விண்டு வாயில் போட்ட பின் தான் செய்த தப்பு புரியும். 'ஒன்றுக்கு இரண்டு பழம் எடுத்து கொண்டு இருக்கலாமோ' என்று தோன்றும். அப்போதும் ஒன்றும் கெட்டு விட வில்லை. வெட்கப்படாமல் 'பழம் நல்லா இருக்கே' என்று லேசா பிட்டு போடுங்கள். 'அப்போ இன்னொன்னு சாப்பிடு' என்று அவர்களே கொடுத்து விடுவார்கள்.

"என் கணவருக்கு இன்னும் நெறைய நெறைய cousins இருந்து இருக்கலாம். அப்போ தான் அடிக்கடி கல்யாணம் வரும், ஊருக்கு அடிக்கடி போய் இருக்க முடியும்"...யோசனையோடு,லேசான சாரல் முகத்தில் வருட,மணியாச்சி செல்லும் லிங்க் ட்ரெயினின் ஜன்னல் கம்பியில் முகம் பதித்து,கடந்து போன மயில்களை பார்த்த படி,Bangalore திரும்பிக்கொண்டிருந்தேன்.ஏதோ தோன்றிட விழியுயர்த்தவே, காண கிடைத்தது 'நாஞ்சில் நாட்டு வானவில்'.

Saturday, 14 November 2009

இது கவிதை அல்ல.

முதலில் சிநேகிதிகளின் கணவர்கள் கவிதை வந்தது.

அதை தொடர்ந்து சிநேகிதன்களின் மனைவிகள் கவிதை மாதிரி முயற்சி செய்யப்பட்டது.

ஏதோ நம்மாலானது.கணவனின் சிநேகிதி(?).

********************************************
கணவனின் சினேகிதி(?)

வணக்கம் என்றேன், ஹாய் என்றாள்.
அவருக்கு தோள் வரை இருப்பாளோ?
ஹை ஹீல்ஸ் போட்டு நடக்க பழகணும்.

பாலில் தான் குளிப்பாளோ, பன்னீரோ?
"அழகு கருப்பு நீ " - பாட்டி
என்னை அணைத்து கொஞ்சியது
அவசரமாய் என் நினைவில்.

சிக்கென்று இருக்கிறாள் ஜீன்ஸ்,ஸ்லீவ்லெஸ்ஸில்.
பூச்சூட்டலுக்கு வாங்கிய புடவையில்
லேசாய் வியர்க்கிறேன் ஏசி அறையிலும்.

'உனக்கு டீ போடவே தெரிய வில்லை'
அவர் அடிக்கடி சொல்வதன் அர்த்தம் புரிந்தது.
அவள் தந்த பீங்கான் கோப்பை தேநீரில்.

சச்சினையும் தோனியையும் தாண்டி
கிரிக்கெட் தெரியாது எனக்கு.
அவர்கள் பேசும் 'பிரெட்லீ'யும் 'கூக்லீ'யும்
என் காதில் 'போடீ' 'போடீ' யாய்.

லஞ்ச்சுக்கு சாண்ட்விச் செய்யவா?பாஸ்தாவா?
அவள் கேட்ட அக்கணத்தில்
சமைந்த பெண்ணாய் ஆனது
என் சாம்பாரும் அவியலும்.

எனக்கு "bye " .
அவருக்கு 'monday team outing .casuals .மறந்துடாதே'
என் பகல் நேர சீரியல் நிம்மதியில்
விழுந்தது மண்.
**********************************************

'மனைவியின் சிநேகிதன்' தான் பாக்கி. யாராச்சும் ட்ரை பண்ணுங்க.

Friday, 13 November 2009

சில கேள்விகள் - 2

-படத்துல மாங்கு மாங்கு ன்னு உழைச்சவங்களையே இருட்டடிப்பு பண்ற இந்த காலத்துல "இவர்களுடன் குற்றால அருவி" அப்டின்னு ஒரு படத்துல டைட்டில் கார்டு போடுவாங்க. அது என்ன படம்?

-சாமி படத்துல 'இது தானா இது தானா' ன்னு ஒரு பாட்டு இருக்கு. சித்ராஜி(உபயம்: சூப்பர் சிங்கர்) பாடினது. இந்த பாட்டு ஆரம்பிக்கும் போது சாமியும் மாமியும் ஒருத்தரை ஒருத்தர் பாத்து ஏதோ சொல்லிக்குவாங்க. உதடு அசைவது மட்டும் தான் காமிப்பாங்க. அவங்க அப்டி என்ன சொல்லிப்பாங்க?

-எதிர் நீச்சல் படத்துல மாடிப்படி மாது, கிட்டு பட்டு, நாயர் இப்டி எல்லார் பெயர்களும் நமக்கு சுலபமா ஞாபகத்துல இருக்கும். ஆனா ஒரு தாத்தா ரூம்ல படுத்து லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருப்பார். அவர் பேரு என்ன?

-மேல கேட்ட மூணு கேள்விக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு. அதையும் சொல்லிடுங்க.

Wednesday, 11 November 2009

ஒரு சந்திப்பு, ஒரு சினிமா, ஒரு புத்தகம், கொஞ்சம் டிவி.

இது ஒரு time-pass பதி(கிர்)வு.
******************************
சில வருடங்களாக அமெரிக்காவில் இருந்து வரும், நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலம் பேசும் போது அமெரிக்க accent வருகிறது அவர்களுக்கு. Father is like faedher, People is like Peeble, Water is like Wader.

"Coca cola கொடுத்தால், "Sorry, we dont drink Soda" (soda is like Sodae)என்று சொல்கிறார்கள்.

"என்னது சோடாவா? எங்க ஊருல சோடான்னா பச்சை கலர் பாட்டில்ல கோலிகுண்டு போட்டு இருக்கும். சோடா குடிக்கும் போது அந்த கோலிக்குண்டு சோடா பாட்டில் மூடி வரை வந்து டக் ன்னு இடிக்கும் ஆனா வெளிய வராது. ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்" சொல்ல நினைத்தேன்.

ஆனால் சொன்னது - "சரி சோடா வேணாமா? தண்ணி தரேன்."

நான் கூட சில நாட்களாக, accent கற்று கொண்டு Fletcher மாதிரி (ச்சி...தா...ம்ரம்) பேசலாமா ன்னு யோசிக்குறேன்.

*******************************
கல்லூரி படத்தில், சோகம், கோபம், கருணை, காதல், possessiveness என்று எல்லா உணர்வுகளையும் வெகு நேர்த்தியாக பிரதிபலிப்பார்.பளீர் கலர். Sleek. தமன்னாவை ரொம்ப பிடித்தது. பாய்ஸில் சித்தார்த் தான் ஹீரோன்னாலும், "பாபு கல்யாணம் அப்டிங்கற பேரை 'பாப் கேலி' ன்னு மாத்திக்கிட்டு அலப்பறை பண்றானே, என்னம்மா dance ஆடுறான்"னு யோசிக்க வெச்சார் பரத்.
'கண்டிப்பா பாரு உனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று நண்பர்கள் ஏகத்துக்கு build-up குடுத்த படம் Jab we met. இப்படி மூன்று விஷயங்கள் கலந்து கட்டி இருக்கிறதே என்று படு எதிர்பார்ப்புடன் 'கண்டேன் காதலை' பார்க்க போனோம். பொதுவாக எனக்கு ரீமேக் படங்கள் பார்க்குறப்போ ஒரிஜினல் தான் நல்லா இருந்த மாதிரி இருக்கும். இது வரை பார்த்த ரீமேக் படங்களில் "இது ஒரிஜினல் விட நல்லா இருக்கே" என்று 'அட' போட வைத்தது போக்கிரி மட்டும் தான். அதற்கும் முக்யமான காரணம் "பாடி ஸ்டூடா" track (எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்). ஆனானப்பட்ட அமீர்கான் நடித்தும் ஹிந்தி கஜினி பிடிக்கலை. To me,Sanjay Singhania was not even 10% of Sanjay Ramasamy. So, இந்த படம் பற்றி சொல்லவே வேண்டாம்.Not even 1% of the original.பேரரசு, திருமுருகன் ஹீரோக்களுக்கு பரத் நல்லா பொருந்துவார். But கோட்,சூட் போட்டு, டை கட்டி, CEO ஆக வரும் காட்சிகளில், பாவமாக இருக்கிறது. இடைவேளை வரைக்கும் தமன்னா (சின்மயி குரலில்) பேசிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு அப்றோம் பரத் பேசறார். Titanic படம் பாத்துட்டு தியேட்டர் விட்டு வெளில வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு மழைல நனைந்த மாறி ஒரு உணர்வு இருக்கும். இந்த படம் முடிச்சு வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு யாரும் பேசாம இருந்தா நல்லா இருக்குமேன்னு இருக்கு.

*****************
Dan Brown விழுந்து விழுந்து படிச்ச நாட்களில், உறவினர் ஒருவர், நீ "Paulo Coelho" படித்ததில்லை. அதை படித்தால் டேன் ப்ரோவ்னை தூக்கி போட்டுடுவ" என்று சொன்னதுடன் "The Devil and Ms Prym" புத்தகத்தை வாங்கியும் கொடுத்தார். தலைப்பை பார்த்ததும் ஏதோ பேய்க்கதை என்று நினைத்து படித்துவிட்டு இங்க சொல்லலாம் என்று தான் பேய்க்கதை சொல்கிறேன் என்று சொன்னேன். ஆனால் 'சரி இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை' என்று வேலைக்கு போகும் பெண்களை பற்றி எழுதி விட்டேன்:-)
Book பாதி படித்து இருக்கிறேன். "All human are eventually evil, its only a matter of when they get the chance" என்று சவால் விடும் ஒருவன், பல காலமாக monotonus வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு கிராம மக்கள், "அந்த கிராமத்தில் இருந்து எவனாவது தன்னை கல்யாணம் பண்ணி கூட்டி போய் விட மாட்டானா என்று" ஒரு life-upgrade எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒரு பெண் என்று அழகாக முடிச்சு விழுந்து இருக்கிறது. எப்டி அவிழ்கிறது என்று பார்ப்போம்.

*****************************
பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகளை காதுகளால் மட்டுமே பார்க்கிறேன். 'Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர்-2' அவ்வளவாக follow பண்ண முடிவதில்லை. அவ்வப்போது பார்க்க நேர்ந்த போதும், "இதென்ன பாட்டு போட்டியா? இல்லை நடன நிகழ்ச்சியா" என்று தோன்றியது. குழந்தைகளுக்கு ஏகத்துக்கு மேக்கப், Chocolate மழையாக கொட்டுறது, குடும்பத்தையே மேடைக்கு அழைக்குறதுன்னு நிறைய stunts.Super Singer is too spoilt. வீட்டில் எல்லாரும் அல்கா என்று பெண் வெளுத்து கட்டுவதாக சொல்கிறார்கள். ஒரு பெண்பிள்ளை டைட்டில் ஜெயித்தால் சந்தோஷம் தான்.
கோலங்கள் சீரியலில் "நான் ஞாபகங்களை தொலைத்து விட்டு நிற்கிறேன்" என்று திருசெல்வன் சொல்லுவது காற்று வாக்கில் கேட்டது. என்ன கொடுமை இது தொல்காப்பியன்? உங்களுக்கு எப்போ ஞாபகம் வந்து, நீங்க எப்போ சீரியல் முடிக்கிறது? மு..டி..ய...ல.

*******************************

With that, wishing each of you to have happy and happening pass time.

Friday, 6 November 2009

Alice(s) in wonderland

இன்று காலை கடவுள்களின் பள்ளத்தாக்கு (திரு.தேசிகன் தொகுத்து முன்னுரை எழுதியது) சுஜாதா கட்டுரை தொகுப்பை எடுத்து, கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கம் திறந்தேன். "பெண்களும் நானும்".

பெண் எழுத்தாளர்களுக்கு அறிவுரை, தன்னுடைய அலுவலகத்தில் உடன் வேலை பார்த்த பெண்கள், தன் பாட்டி (இந்த பாட்டி கட்டுரை ஏற்கனவே வேறு எங்கோ படித்த ஞாபகம்) என்று கட்டுரையில் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை.

பெண்களிடம் வேலை வாங்க மூன்று விதி முறைகள் இருக்கிறதாம். அவருடைய அனுபவத்தில் சொல்கிறார்.

-பெண் என்பதால் இந்த வேலை வராது என்று முடிவு பண்ண கூடாது.
-பெண்களிடம் உள்ள இயற்கை கோளாறுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
-பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது.

முதல் பாயிண்ட் படித்த போது ஒரு சபாஷ் போட்டது மனது.

இரண்டாவதை படித்த போது,(அவர் எந்த இயற்கை கோளாறை :-) சொன்னாரோ)எனக்கு இந்த பதிவை எழுத தோன்றியது.

வேலைக்கு போகும் பெண்களுக்கு என்னுடைய சொந்த/'உடன் பணிபுரிவோரை கவனித்த' அனுபவத்தில் சொல்ல விரும்பும் சில விஷயங்கள்:

- நம் மேலாளரிடமோ,உடன் பணிபுரிவோரிடமோ 'நாம் பெண்' என்ற காரணத்தை வைத்து எந்த சலுகைகளையும் எதிர்பார்க்காதீர்கள். இது நமது குடும்பம் அல்ல. இங்கு நாம் செய்யும் வேலைக்கு மட்டும் தான் சம்பளமே தவிர, நமது உடல்,மன பிரச்சனைகளுக்கு சேர்த்து அல்ல.அப்படி எதிர் பார்த்தோமே ஆனால்,அது நம்மை நாமே தாழ்த்தி கொள்ளுவதற்கு சமம்.

- குழந்தை பெறுவது, மாதா மாத சமாச்சாரங்கள் எல்லாம் நமது anatomy. கடவுள் design பண்ணது. இதெல்லாம் மொத்தமாக சேர்த்து தான் நாம். "இதனால் எல்லாம் என் வேலை பார்க்கும் திறன் குறைகிறது, career growth தடை படுகிறது, ஒரு ஆணுக்கு இந்த பிரச்சனைகள் இல்லை" என்று புலம்பாதீர்கள். மொத்தத்தில் "எனக்கு அங்க வலிக்குது இங்க வலிக்குது" விஷயங்களை எல்லாம் அலுவலகத்துக்கு கிளம்பும் போது செருப்பை மாட்டுவோமே,அப்போதே கழற்றி வைத்து விடுங்கள்.

- அலுவலக மீட்டிங் போது, ஆறரை அடி உயரத்தில் கடுகடு முகத்தோடும்/குரலோடும் ஒருத்தன், வேணும்னே வேணும்னே நம்மள outsmart பண்ணவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கேள்வி கேக்கும் போது கொஞ்சம் உதற தான் செய்யும். பயப்படாதீர்கள். அதற்கு முதல் தேவையாக technical skillsஐ வளர்த்து கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அறிவாளியாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். எந்த கொம்பனையும் சமாளித்து விடலாம்.சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் மேலாளருக்கு கீழே வேலை பார்த்தேன். அவங்க சொல்வாங்க,
"If one has to run 100 meters to prove that one can run, a woman has to run 200 meters to prove that she can run".

- "நான் ஒரு பெண்" என்ற consciousnessஐ துடைத்து எறிந்து விடுங்கள்.இந்த நினைப்பு நம்மை பலவீனமாக ஆக்கி விடும்."வெகு உயரத்திற்கு சரசர வென்று போய் விட்ட பெண்களை, வேறு எந்த விதத்திலும் விமர்சிக்க வழி இல்லாத நிலையில்,அவர்களது பர்சனல் விஷயங்கள் படு மலிவாக விமர்சிக்க படலாம்.துளியும் கண்டு கொள்ளாதீர்கள்."ஐயோ நான் ஒரு பொண்ணாச்சே...இப்டில்லாம் பேசறாங்களே" என்று எந்த நிமிடத்தில் concsious ஆகிறீர்களோ, அப்போதே தோற்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.

-கட்டுரையில் கவர்ந்த இன்னொரு வரி, பெண்களுக்கு 'சுலபக்கோபமும்' ,அழுகையும் வரும். அலுவலகத்தை பொறுத்த வரை சில நேரங்களில் 'சுலபக்கோபம்'நம்மள காப்பாத்தும். ஆனா தப்பு நம்ம மேல இருந்தா, தைர்யமா ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுடுங்க. தேவை இல்லாத இடத்தில் செய்யப்படும் விவாதம், கேலிக்குரியதாகி விடும். ஆனா எந்த காரணத்துக்கும் அலுவலகத்தில் அழாதீர்கள். (எங்கயுமே அழாம இருப்பது ரொம்ப நல்லது. ஆனா அது நமக்கு சற்று கஷ்டம் தான்)

-பேறு கால விடுப்பிற்கு பிறகு வேலைக்கு சேர்ந்த முதல் சில மாதங்களுக்கு நம் மனதில் புயல், மழை, சூறாவளி எல்லாம் சேர்ந்து சுற்றி சுழற்றி அடிக்கும். 'வேலைக்கு கண்டிப்பா போகணுமா?' 'குழந்தை சாப்பிட்டுச்சோ இல்லையோ','அம்மாவை தேடுதோ', இந்த மாதிரி மன உளைச்சல் மட்டும் இன்றி, நிறைய உடல் உபாதைகளும் கூட சேர்ந்து பாடாய் படுத்தும். இந்த நேரத்தில் நாம் கடை பிடிக்க வேண்டியது பொறுமை பொறுமை மற்றும் பொறுமை. 'வேலைய விட்டு விட வேண்டும்'என்ற முடிவை இந்த நேரத்தில் தப்பி தவறி கூட எடுத்து விட வேண்டாம். நம் உடல்நிலை, வாழ்க்கை முறை எல்லாமாய் மாறி விட்டதால் ஏற்படும் அயர்ச்சி தான் இது. சில மாதங்களை பொறுமையாக கழித்து விட்டோம் என்றால், அப்புறம் ஒரு தெளிவும் நிதானமும் வந்து விடும். அதுக்கு பிறகும் வேலைய விட தோன்றினால் அது சரியான மனநிலையில் எடுக்கும் முடிவு.

-குடும்பம், குழந்தை என்று ஆன பிறகு , வேலையில் கவனம் செலுத்துவது சவாலான விஷயம். நீங்கள் எவ்வளவு "ambitious " என்பதை பொறுத்து உங்கள் சாய்ஸ் தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்த சாய்ஸில் தெளிவாக இருங்கள். சில பெண்களுக்கு குடும்பம் வேலை என்று இரண்டையும் சமாளிக்கும் சாமர்த்தியம்/அதிர்ஷ்டம் இருக்கலாம். முடிந்தவரை அந்த சாமர்த்தியத்தை கற்றுக்கொள்ள முயலுங்கள்.முடியாது போனால்,அதற்காக குமையாதீர்கள். ஆனால், நாம் அலுவலகத்தில் எவ்வளவு effort போடுகிறோமோ அதை பொறுத்து தான் உங்கள் உயர்வு நிர்ணயிக்க படும் என்பதில் தெளிவாக இருங்கள். இங்கு எல்லாமே Tit for Tat தான். "I am ambitious"," I am capable" முதலான qualitative விஷயங்கள் மட்டும் வேலைக்கு ஆகாது. செயலில் காண்பிக்க வேண்டும். நமது பர்சனல் காரணங்களினால், ரிசல்ட் காண்பிக்க முடியாது போனால், அதற்கான பலனை எதிர்கொள்ளும் பக்குவமும் வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிட்டு மூக்கை சிந்த கூடாது.Try to take things easy. Job is just something that brings food to our plate.

-மூன்றாவது பாயிண்ட் (பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது) படித்த போது, சற்று sarcastic புன்னகை வந்தது. லாஜிக் நல்லாவே வர்ற பெண்களும் இருக்கிறார்கள். உணர்வு பூர்வமாக மட்டுமே பார்க்க தெரிந்த ஆண்களும் இருக்கிறார்கள். பெண்களை கிண்டல் பண்ணி கொண்டே டிவி சீரியல் பார்க்கும் ஆண்களை போலவே.

To all the working women, We all are Alice(s)!There will ofcourse be 'rabit holes', 'drinks that would shrink you', cakes that would grow you', 'riddles with no answers', 'caterpillars', 'dodos', 'King', 'Queen' and many more. Lets Rock it. After all, we are in WONDERLAND you see :-)

Tuesday, 3 November 2009

ஜூலி போட்டது ரெண்டு குட்டி

முன்குறிப்பு: இது ஒரு சிறுகதை முயற்சி அல்ல. இலக்கியவாதிகள் அச்சம் தவிர்த்து தொடர்க.

கரண்ட் இல்லாத ஒரு மழை நேர மாலையில் தான் ஜூலி எங்கள் வீட்டுக்கு வந்தது. அப்போ அது நிறை மாத கர்ப்பிணி. வீட்டு சுவரோரம் மழைக்கு ஒதுங்கி குளிரில் நடுங்கி முனகி கொண்டு இருந்ததை பார்த்து அப்பா, அம்மா, நான், தம்பி என்று குடும்பமாக இரக்கபட்டோம். அடுத்த பத்து நிமிடத்தில் திண்ணையில் ஒரு சாக்கு படுக்கையும், ஒரு பழைய தட்டில் பால் சோறுமாக, ஜூலி எங்களோடு சேர்ந்து கொண்டது. அழுக்கான வெள்ளை நிறத்தில் இருந்த அதற்கு நானும் தம்பியும் சேர்ந்து ஜூலின்னு பெயர் வைத்தோம்.

ஜூலிக்கு எங்க எல்லாரையும் ரொம்ப பிடித்து விட்டது. நானும் தம்பியும் மாலை நேர நொறுக்கு தீனியை மூன்று பங்கு ஆக்க ஆரம்பித்தோம். "குட்டி போட போகுதுல்ல, பாவம் ரொம்ப பசிக்கும்" என்று அம்மா அடிக்கடி அதற்கு ஏதாவது கொடுத்து கொண்டே இருப்பாங்க. ஜூலி இது எல்லாத்தையும் விட எங்க அப்பாவோட TVS -50 சத்தத்துக்கு தான் அதிகமா வால் ஆட்டும்.

அப்பா பத்தாங்கிளாஸ் ஆங்கில டியூஷன் எடுப்பாங்க. அதுல 'ஹரன்'ன்னு ஒருத்தன் படிச்சான். இந்த கதைல இவன் எங்க வந்தான்? விஷயம் இருக்கு. கதைக்கு ஒரு திருப்பு முனை கொடுக்க போறதே இவன் தான். இவன் அப்டி என்ன பண்ணான்னு இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்லிடறேன்.

எங்க வீட்டுல அப்போ ஏதோ பூச்சு வேலை நடக்குதுன்னு நிறைய ஆத்து மணல் கொட்டி வெச்சுருந்தாங்க. அந்த மணல்ல தான் நானும் தம்பியும் அப்பாக்கு ரெண்டு பக்கமும் படுத்துக்கிட்டு நிலாவை பாத்துக்கிட்டே கதை கேப்போம். ஜூலியும் எங்க பக்கத்துல உக்காந்துக்கும்.

ஜூலி வந்து ஒரு நாலஞ்சு நாள் ஆயிருக்கும்.ஒரு நாள் நைட் ஜூலி லேசா முனகிட்டு இருந்துச்சு. அதோட சாக்கு படுக்கையில படுத்துக்காம எழுந்து போய்டுச்சு. "அம்மா எங்க போகுதுன்னு போய் பாப்போமா" ன்னு கேட்டதுக்கு, "அதெல்லாம் வேணாம், பேசாம படுங்க" ன்னு சொல்லிட்டாங்க. காலைல அம்மா சொன்னாங்க, "ஜூலி குட்டி போட்டுடுச்சு. ஆனா எங்க போட்டு வெச்சுருக்கு, எத்தனை குட்டி போட்டுருக்கு ஒன்னும் தெரியலை" ன்னு.

நானும் தம்பியும் துப்பு துலக்கி ஜூலி பின்னாடியே போனோம். அது அந்த ஆத்து மணல் குவியல்ல ஒரு பொந்து மாதிரி பண்ணி அதுக்குள்ள போய்டுச்சு.
"அம்மா! ஜூலி மண்ணை தோண்டி பொந்து மாதிரி செஞ்சு அதுக்குள்ள குட்டி போட்டு இருக்கும்மா, ஆனா எத்தனை குட்டி தெரியலை" .
"ரெண்டு மூணு நாள் கழிச்சு அதுவே வெளிய வரும். இப்போதைக்கு நீங்க பக்கத்துல போய் வெக்காதீங்க, கடிச்சுட போகுது" ன்னாங்க அம்மா.

நானும் தம்பியும் மணலை சுத்தி சுத்தி வந்து பொந்துக்குள் எட்டி பார்த்தா எதாவது தெரியுதான்னு முயற்சி பண்ணிட்டு இருந்தோம். "அதோட வயிறு இருந்த சைஸ்க்கு ஒரு அஞ்சு குட்டியாவது போட்டு இருக்கும். ஆண் குட்டின்னா யாராவது எடுத்துட்டு போய்டுவாங்க. பெண் குட்டிய எல்லாம் என்ன பண்றது தெரியலை" ன்னு அம்மா ஒரே பொலம்பல். அப்பா ஜூலிக்கு ஸ்பெஷல் கவனிப்பு பண்ணிட்டு இருந்தாங்க.நானும் தம்பியும் ஒரு தேடலுடனேயே இருந்தோம்.

ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஜூலி postpartum sickness எல்லாம் முடிஞ்சு சகஜமா வால் ஆட்ட ஆரம்பிச்சது. அன்னைக்கு சாயங்காலமே அதோட குட்டியை எங்க கண்ணுல காட்டிட்டுது. எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏன்னா ஒரே ஒரு குட்டி தான் இருக்கு ஜூலி கூட. கருப்பு கலர்(அதோட அப்பா மாதிரியா இருக்கணும்). பெண் பிள்ளை.



"நாய் பொதுவா ஒரே ஒரு குட்டி போடாது, ஒரு வேளை மணல் ஏதும் சரிஞ்சு மத்த குட்டில்லாம் செத்து போச்சான்னு" அம்மா கவலை பட, எனக்கும் தம்பிக்கும் தூக்கி வாரி போட்டது. மொத்த மணலையும் கவனமாக அகற்றி, துழாவி துருவி தேடினோம். ஒன்னும் அகப்படலை.

தனிக்காட்டு ராஜா(ஜி)வாக வளர்ந்தது ஜூலியோட குட்டி. போட்டிக்கு ஆள் இல்லாம வயிறு முட்ட பால் குடித்து, 'மொத்த அம்மாவும் எனக்கே எனக்கு' ன்னு பெருமையாக வளர்ந்ததில் மூன்றே வாரத்தில் ஒரு முயல் அளவுக்கு வளர்ந்து நின்றது. ஒரு நாள் அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் ஜூலிக்கும் குட்டிக்கும் பிஸ்கட் கொடுத்து கொண்டு நான் அம்மா, தம்பி timepass பண்ணி கொண்டு இருந்தோம்.

"டீச்சர்....டீச்சர்.... " என்று சன்னமாக அழைத்து கொண்டே தலையை குனிந்து கொண்டு ஹரன்.
"என்னப்பா"
கையில் இருந்த கூடைக்குள் இருந்து எதையோ வெளியில் எடுக்கிறான், அதும் கருப்பும் வெள்ளையும் கலந்த கலரில்...துளியூண்டாக ...எலி மாதிரி....
"என்னை மன்னிச்சுடுங்க டீச்சர். சார் கிட்ட எப்டியாவது நீங்க தான் சொல்லணும். ஜூலி ரெண்டு குட்டி போட்டு இருந்துச்சு, கேட்டா தருவீங்களோ என்னவோன்னு நான் தான் இத யாருக்கும் தெரியாம தூக்கிட்டு போயிட்டேன், ஆனா சரியா சாப்பிட மாட்டேங்குது, செத்துடும் போலிருக்கு, அதான் திரும்பி கொண்டு வந்துட்டேன்" என்கிறான். கிட்டத்தட்ட அழுதான்.


அது ஆண் பிள்ளை. பிள்ளை பூச்சி சைஸ்ல இருக்கு. பாவம் கண் கூட முழிக்காத குட்டிய திருடிட்டு போய் இருக்கான் கிராதகன்.
"சரிப்பா ஏதோ இந்த மட்டும் கொண்டு வந்தியே, அதோட அம்மா கிட்ட பால் குடிச்சுதுன்னா பொழச்சுடும், கொஞ்சம் தேறினதும் நீயே எடுத்து போய் வளரு" - அம்மா.

அப்றோம் ஜூலியும் அதோட ரெண்டு குட்டியுமா அமளி பட்டது வீடு. இரண்டு வாரங்களிலேயே அந்த சின்ன குட்டியும் தேறி விட, ஹரன் வந்து அப்பாவிடம் கேட்டு எடுத்துட்டு போனான்.

எங்க தெருப்பகுதியில் ஒருத்தர் அடிக்கடி வந்து குரங்கை வைத்து வித்தை காட்டுவார். "ஆஞ்சநேயர் தனியா இருக்கார்ம்மா, அவர் கூட வெளாட ஒரு வைரவர் கொடுங்கம்மா" என்று அந்த பெண்குட்டியை கேட்டு அடம் பண்ணார். "அடிக்காம பத்ரமா பாத்துக்கோங்க,அப்போப்போ கொண்டு வந்து கண்ணுல காட்டுங்க" என்று கண்ணீருடன் அடுத்த குட்டியையும் அவரிடம் கொடுத்தாகி விட்டது.

அப்பா போன பிறகு, அந்த வீட்டை விட்டு நாங்களும் போய் விட்டோம். ஜூலி எங்களுடன் வர வில்லை. சில மாதங்கள் கழித்து நானும் தம்பியும் வீடு காலி பண்ண அந்த வீட்டுக்கு போன போது மறுபடி ஜூலியை பாத்தோம். உண்டாகி இருந்தது.

பின்குறிப்பு: நாய்க்கதை பிடித்து இருந்தால் சொல்லுங்கள். அடுத்து ஒரு பேய்க்கதை சொல்லுகிறேன்.