Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Thursday, 7 January 2010

2 States வாசிப்பு அனுபவம்




'மாப்பிள்ளை திமிர்' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. திருமணமான பெண்களுக்கு மட்டும் புரிந்த வார்த்தை.

"Afterall, your family is like mine you see" என்ற ஒரு சுகர் கோட்டிங்கோடு, கணவர்கள் நம்ம குடும்பத்தை நக்கல் பண்ணி தள்ளுவது. "உங்க குடும்பத்துல யாரும் பேசாம டிவி பாக்க மாட்டாங்களா?", "உங்க அம்மா நல்லா சமைப்பாங்கன்னு சொன்னியே, ஒரு வேளை இன்னைக்கு உடம்பு கிடம்பு சுகமில்லையா? ", "உன் தம்பிக்கு முன்னாடி இதே மாதிரி சட்டைய கரகாட்டக்காரன் படத்துல பாத்தேன்" போன்ற இத்தியாதிகள்.35 வயதாகும் சேதன் பகத்துக்கு உடம்பு முழுக்க மாப்பிள்ளை திமிர்.தமிழ் நாட்டுல பெண் எடுத்துட்ட கவச குண்டலம். "You only make fun of people you care for, otherwise I dont have anything against you, dear south indians" ன்னு ஒரு டிஸ்க்ளைமர்.நம்மவர்களை போட்டு சாத்து சாத்துன்னு சாத்திருக்கார். புத்தகம் முழுக்க.

சாம்பாரில் இருந்து ஆரம்பித்து, நம்ம நிறம், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பது, பட்டுப்புடவை, நகைகள் என்று ஒன்றை விட வில்லை. பஞ்சாபிக்காரர்களையும் ஒரு கை பார்க்கிறார். இருந்தாலும் நம்ம வீட்டுக்காரரை நம்ம சாத்துறதுக்கும், பக்கத்து வீட்டுக்காரம்மா அதையே செய்றதுக்கும் தான் எத்தனை வித்தியாசம்? அதனால புத்தகம் படிக்கும் போது நமக்கு பொங்குகிறது. ஒரு வேளை சேதன் காதலித்த பெண் தெலுங்கு பெண்ணாய் இருந்து, அவர் கோங்குரா சட்னியை நக்க'லு' பண்ணி இருந்தார்ன்னா, நமக்கு ரசித்து இருக்குமோ என்னவோ?

"This book is dedicated, (for the first time in the history of books), To my inlaws.That does not mean I am henpecked or not man enough"
இப்படி வரலாற்று சிறப்புடன் ஆரம்பிக்கும் புத்தகத்தின் கதை இது தான்:
பஞ்சாபி பையனுக்கும், தமிழ் பொண்ணுக்கும் காதல். பெற்றோர் எதிர்க்கிறார்கள். DDLJ ஷாருக், பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யா, ஜோடி பிரசாந்த் வரிசையில், 2 ஸ்டேட்ஸ் க்ரிஷ் மல்ஹோத்ரா. ஒரே ஒரு வித்தியாசம். இந்த படங்களில் எல்லாம்,"நம்ம பெண்ணை ஆட்டைய போட தான் வந்துருக்கான்" என்ற உண்மை பெண் குடும்பத்தாருக்கு கிளைமாக்சில் தான் தெரிய வரும்.சென்னைக்கு வரும் க்ரிஷ், பெண் வீட்டாரை வழிக்கு கொண்டு வருகிறார். நாயகி டெல்லிக்கு சென்று க்ரிஷ்ஷின் குடும்பத்தை இம்ப்ரெஸ் செய்து விடுகிறார். ஆனாலும், ரெண்டு குடும்பமும் ஒன்றை ஒன்று முறைத்து கொள்ள, காதலர்கள் பிரிகிற நிலைமை. 'Something Something' happens and முடிவு சுபம்.

இந்த டப்பா கதையில் அப்படி என்னதான் இருக்கிறது? என்றால், உண்மையில் ஒன்றும் இல்லை. பின்ன புத்தகம் சக்கை போடு போடுகிறது."Chetan Bhagat has made India read like never before" என்று கொண்டாடுகிறார்கள்.

காரணம்: எளிமை. இலக்கியப்பதிவுகளை விட, உப்புமா பதிவுகளுக்கு எக்கச்சக்க ஹிட்ஸ் கிடைக்கிற அதே strategy.Dan Brown, Paulo Coelho க்களை நாட்கணக்கில், வாரக்கணக்கில் வைத்து கொண்டு திண்டாடுபவர்களுக்கு கூட வெறும் இரண்டு மணி நேரம் போதும். முழு புத்தகத்தையும் படித்து முடிக்க. அதுவும் ஒரு கையால் சப்பாத்தி சுட்டுக்கொண்டு, அது வேகும் நேரத்தில், அதே கையால் சப்ஜியை கிளறிக்கொண்டே இன்னொரு கையால் 2 ஸ்டேட்சை பிடித்துக்கொண்டு கூட படிக்கலாம். ஒரு வார்த்தைக்கு கூட அகராதி வேண்டாம். ஆனால் ஒரு ஆங்கிலப்புத்தகம் வாசிக்கும் உணர்வை தராதது குறையா நிறையா என்பது வாசிப்பவரை பொருத்தது. ஒரு ஜனரஞ்சகமான தமிழ் நாவல் வாசிக்கும் அனுபவம் தான் எனக்கு இருந்தது.

Heroine அனன்யா. ஆச்சாரமான தமிழ் குடும்பம். ரொம்ப தைர்யமான, அறிவான, வெகு அழகான பெண்ணாக காட்ட படுகிறார். ஆனால் செய்வதெல்லாம் செம அராத்து வேலைகள். தந்தூரி சிக்கனை வெளுத்து கட்டுகிறது. தன் பாய் ப்ரெண்டு ரூமில் அதும் IIMA கேம்பசுக்குள் ரெண்டு வருடம் சேர்ந்து தங்குகிறது(பல் விளக்கி, குளிக்க தன் ரூமுக்கு போய்டும்). ரத்னா ஸ்டோர்சில் வைத்து தன் காதலனுக்கு கிஸ் கொடுக்கிறது. அதும் அடுத்தவர் பார்க்கிற மாதிரியா குடுப்பாங்க அசடு?பீர்,வோட்கா என்று அடித்து ஆடுகிறது. படிக்கறப்போ நமக்கு கேராக இருக்கிறது. அதும் இதெல்லாம் நடப்பது பத்து வருஷத்துக்கு முந்தியாம். ஆரம்பித்தில் சொல்கிறார் சேதன். "இது என் சொந்தக்கதை. ஆனாலும் நிறைய fiction இருக்கிறது"
கடவுளே, இதெல்லாம் fiction ஆகவே இருக்கட்டும்.

பம்மல் கே சம்பந்தம் படத்தை பல தடவை பார்த்தாலும் பார்க்கிறப்போ எல்லாம் சிரிக்கலாம். ஆனால் காதலா காதலா படத்தை முதல் தடவை பார்க்கிறப்போ மட்டும் தான் சிரிப்பு வரும். இந்த புத்தகத்தில் இருக்கும் நகைச்சுவை இரண்டாம் வகையை சேர்ந்தது.
Yet, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் சில இடங்களில்.
அனன்யா தன்னை பெண்பார்க்க வந்தவன் "எனனை virgin னா" ன்னு கேட்டான் என்று க்ரிஷ்ஷிடம் சொல்கிறாள்.
"he asked if I am pure?"
அதற்கு க்ரிஷ்,"Does he want Ghee or what?".

"தென்னிந்திய பெண்கள், அதும் தமிழ் பெண்கள், வடக்கத்தி ஆண்களை விரும்புவார்கள். அவர்களை கவிழ்த்து விட என்ன வேணும்னாலும் செய்வாங்க" க்ரிஷ்ஷின் அம்மா சொல்கிறார். அதற்கு காரணம் அங்க ஆண்கள் ரொம்ப செவப்பாம்.உதாரணத்துக்கு ஹேமமாலினி, ஸ்ரீதேவி. அட பாவிகளா? எங்க ஊருலேர்ந்து "stunning beauties" ரெண்டு பேரை தட்டிட்டு போனதோட, இப்டி வேற எண்ணம் இருக்கா உங்களுக்கு? Superiority complex at its maximum.

கல்லூரி மாணவர்களிடம் சகஜமாக புரளும் அனைத்து unparliamentary வார்த்தைகளையும் அள்ளி தெளித்து இருக்கிறார்.ஆங்கிலத்தில் மட்டுமில்லை. அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழிலும். தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணி, எது தெரிஞ்சிகிட்டாரோ இல்லையோ, இதெல்லாம் ரொம்ப நல்லா கத்துட்டு இருக்கார்.

தமிழர்களின் சங்கீத ஆர்வம், கல்வி மீது உள்ள மோகம் என்று சில விஷயங்கள் நல்லதாகவும் சொல்கிறார். உற்று கவனித்தால் அதிலும் நக்கல் ஸ்மைலிகள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. "when it comes to music,Tamilians could kill", "They just have good brains".

"உங்க அம்மா சமையல் generally ரொம்ப சுமார் தான்னாலும், உருளை கிழங்கு பொரியல் அவங்கள மாதிரி பண்ண எங்கம்மாவால கூட முடியாது" ரக, diluted மாப்பிள்ளை திமிர்.

பஞ்சாபி மக்களின் வரதட்சணை சிஸ்டம், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கல்யாண வீட்டில் செய்யும் அலப்பரைகள், "உணவே பிரதானம்" என்ற அவர்களுடைய கொள்கை, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தர் மீது ஒருத்தர் வைக்கும் அன்பு என்று நமக்கு பஞ்சாபிக்களை பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது இந்த புத்தகத்தில்.பஞ்சாபி பையன்களை ரூட் விட்டுக்கொண்டு இருக்கும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் :-) படித்த பிறகு 'இந்த பையன் அவசியம் தானா' என்று தோன்றி விடும் ரிஸ்க் இருக்கிறது.

IIM, IIT, Citibank, HLL, இந்த நிறுவனங்களை பற்றிய நையாண்டிகள் நிறைய. ஆனால், "பச்ச், இதையெல்லாம் எங்க தமிழ் பதிவர்களை எழுத சொல்லி பாருங்கள், பிரிச்சு மேஞ்சுருப்பாங்க" என்று சொல்லவைக்கும் அளவு தான்.Sarcasm not at its best.

"ரெண்டு மாநிலங்களுக்கிடையே இருக்கும் பிராந்திய பேதங்கள், தண்ணீர் பிரச்சனை, கரண்ட் பிரச்சினை, எல்லை பிரச்சினை போன்றவைகளோடு நிற்பதில்லை.சிலருக்கு வாழ்க்கையையே புரட்டி போடுகிறது, அதனால எல்லாரும் "நான் இந்தியன்" என்று நினையுங்கள்" என்று சொல்ல முயன்று இருக்கிறார். அட போங்க சேதன், நாங்க இருக்கிற மாநிலங்களையே இன்னும் எத்தனையா பிரிக்கலாம்ன்னு பார்த்துட்டு இருக்கோம்! எங்க கிட்ட போய்?

My verdict: Expectations partially met.

இட்லிவடையில் வெளியானது.
 இட்லிவடைக்கு நன்றி.

Friday, 1 January 2010

என் செல்ல செல்வங்கள் - ஒரு முன்னோட்டம்.



தமிழ் இணையம் அப்போது தான் எனக்கு அறிமுகம். இரண்டரை வருடங்கள் இருக்கும்.ஒரு மதிய நேர 'மரத்தடி' வாசிப்பின் போது கண்ணில் பட்டது தான் 'என் செல்ல செல்வங்கள்' தொடர்.

அண்ணனும் தங்கையுமாக சேர்ந்து ரெண்டு வாத்து குஞ்சுகளை அண்டா தண்ணில நீச்சல் அடிக்க விட்டுட்டு அடுத்த வீட்டுக்கு போய்டுவாங்க. திரும்பி வந்து பார்க்கறப்போ, நீந்தி நீந்தி களைப்பான வாத்துகள், தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டு இருக்கும். இதான் முதல் அத்தியாயம். "சோகத்தை கூட சுவையாக சொல்ல முடிந்து இருக்கிறதே" இந்த எண்ணத்துடன் தொடர்ந்தேன். பத்தொன்பது அத்தியாயங்கள். வளர்ப்பு பிராணிகள் பற்றிய நெகிழ வைக்கும் தொடர்.நடுவில் தண்ணீர் குடிக்க கூட எழுந்திரிக்க வில்லை. "கப்புவின் கடைசி நாட்கள்" படித்து முடித்து நிமிர்ந்த போது வெளியில் இருட்டு, உள்ளே கனம். சாப்பிட தோன்ற வில்லை. அப்படியே படுக்கையில் விழுந்தவள் தான். கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தாலும் கூட, ஏதோ ஒரு நிறைவான உணர்வு. எங்கள் வீட்டில் எங்களுடன் வளர்ந்த ஜூலி, ஜானி, பப்பி , ப்ளாக்கி எல்லாரும் கனவில் வந்து போனார்கள்.

ஒரு நாய் பூனை கதைக்கு இவ்ளோ பெரிய பில்டப்பா? என்று கேட்பவர்களுக்கு என் பதில் இது தான்.
-முதலாவதாக செல்ல பிராணிகள் நமது குழந்தைகள் போல தான். அன்பு செலுத்துவதற்கு, அதற்கும் மேலாக அன்பை பெறுவதற்கு, இதை விட ஒரு எளிய வழி இருக்க முடியாது.
-அதை விட முக்கியம். தனிமையில் வாடும் எத்தனையோ பேருக்கு, வளர்ப்பு பிராணிகள் தான் ஆறுதலாக இருக்கிறார்கள்.

அடுத்ததாக, 'என் செல்ல செல்வங்கள்' வளர்ப்பு பிராணிகள் பற்றிய ஒரு தொடர் மட்டும் அல்ல."பிராணி விரும்பிகளுக்கும்,வெட்னரி டாக்டர்களுக்குமானது,not my kind" என்று நினைத்து விட வேண்டாம்.

தொடரை ஊன்றி படித்தவர்கள் இதை கட்டாயம் ஒத்துக்கொள்வார்கள். வாழ்க்கையின் மிக சாதாரணமான நிலையில் இருந்த ஒரு குடும்பம், படிப்படியாக எப்படி ஒரு சமூக அந்தஸ்த்தை அடைகிறது என்று, டைரக்டர் விக்ரமன் ஒரே பாட்டுக்குள் அடைத்து விடும் விஷயம், இந்த செல்லங்கள் தொடரில், subtle ஆக சொல்ல பட்டு இருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாடகை வீடு மாற்றுவதையே ஏதோ அடுத்த ஊருக்கு ஒரு நாள் பயணம் செல்வது போல, சாவகாசமாக செய்ய முடிந்த அளவில் மட்டுமே பொருட்கள் வைத்து இருக்கும் ஒரு எளிய குடும்பம், தொடரின் முடிவில் நியூசிலாந்தில் சொந்த வீட்டில் இருந்து அடுத்த தெருவில் இருக்கும் கால்நடை மருத்துவரிடம், காரில் செல்லும் அளவுக்கு உயர்ந்து இருப்பார்கள்.

துளசி கோபால்.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...ன்னு ஒரு பாட்டு இருக்கு.அது மாதிரி வலையுலகத்தில் டீச்சர் யாருன்னு கேட்டு பாருங்க. இவங்க தான். இவர்களுடைய பயணக் கட்டுரைகளும், புராணக்கதைகளை எளிமையாக சொல்லும் விதமும் மிகவும் பிரபலம்.1000 பதிவுகளை அனாயாசமாக தொட போகிறவர்."தேவதை" இதழில், "பெரிய மனசு, பெரிய மனுஷர்" என்ற தலைப்பில் இவர்களைப் பற்றிய கட்டுரை சமீபத்தில் வெளியாகியது.இவர்களுடைய பதிவுகளில் எளிமை இருக்கும். "Woman next door" இமேஜ் இருக்கும். அழகான புகைப்படங்கள் இருக்கும். நல்ல நகைச்சுவை இருக்கும். செல்ல செல்வங்கள் தொடரிலும் இவை அனைத்தும் உண்டு.

ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இவங்களுக்கு வண்ணத்து பூச்சி விருது கொடுத்தப்போ, இவங்களை பத்தி எழுதின நாலு வரிகள்:
"சூரியனுக்கு டார்ச் அடிக்காம நேரா விஷயத்துக்கு வரேன். இவங்க எழுதாத விஷயமே கிடையாதுங்கற அளவுக்கு வெரைட்டி. இவங்க அன்றாடம் வாழறதை எல்லாம் பதியறாங்களா அல்லது பதியறதுக்காக வாழறாங்களான்னு இனம்பிரிக்க முடியாத அளவுக்கு அவங்க வீட்டு பெர்சனல் விஷயங்கள்லேருந்து, நியூசிலாந்து விசேஷங்கள் வரைக்கும் எதையும் மிஸ்பண்ண முடியாது. எனக்குத் தெரிஞ்சு பேச்சுத் தமிழ்லயே சக்கைபோடு போடமுடியும்னு முதன்முதலா இணையத்துல நிரூபிச்சவங்க. எல்லாருக்கும் நல்லவங்கன்னு பாராட்டா பலரும் மாற்றா சிலரும் சொன்னாலும், அது எவ்வளவு சிரமம்னு அனுபவிச்சா தெரியும்."

விஷயத்துக்கு வரேன். துளசி கோபால் எழுதிய 'என் செல்ல செல்வங்கள்' தொடர் புத்தகமாக வெளிவருகிறது. இன்று முதல் புத்தக கண்காட்சியில் கிடைக்கும். சந்தியா பதிப்பகம்.

தொடரை படித்து இரு வருடங்களுக்கு பிறகு, எதேச்சையாக இவர்களுடைய அறிமுகம் கிடைக்க போக, இவர்களுக்கு ஒரு மெயில் தட்டினேன். "உங்கள் செல்லங்கள் பத்தொன்பதையும் ஒரே நாளில் படித்து, மூன்று நாட்கள் கப்புவை நினைத்து அழுதவள் நான். இப்போதும் அந்த கடைசி எபிசோடை நினைத்தாலே மனசு கனத்து போய் விடும் எனக்கு. செல்லங்களை நான் உங்கள் செல்ல குழந்தைகள் பற்றிய தொடராக மட்டும் பார்க்க வில்லை. வாழ்க்கையின் மிக சாதாரண நிலையில் இருந்து, படிப்படியாக நீங்க உயர்ந்துள்ள நிலையை நீங்கள் எவ்ளோ எளிமையாக, எங்களுக்கு உணர்த்தி இருந்தீர்கள்"என்று நான் அனுப்பி இருந்த மடலை புத்தகத்தின் முன்னுரையில் சுட்டி இருப்பதில் மகிழ்ச்சி. "புதிய பார்வை" இதழில், புத்தகத்தின் சில சுவாரஸ்யமான பக்கங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். தன்னுடைய வலைப்பதிவில் ஸ்கேன் பண்ணி போட்டு இருக்கிறார்.பாருங்கள்.

My verdict: Pets and BEYOND.

Wednesday, 9 December 2009

அப்துல் கலாம் : கனவு நாயகன்


சில புத்தகங்கள் பார் சாக்லேட் மாதிரி. ஒரு கடி கடித்த பிறகு கவர் போட்டு உள்ளே வைக்க முடியாது. ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடித்து விட்டு தான் மூட முடியும். கனவு நாயகன் அந்த ரகம் அல்ல. டின்னில் வருமே குலாப் ஜாமூன்,ரசகுல்லா எல்லாம். அந்த மாதிரி. ஒன்று எடுத்து சாப்பிட்டு விட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, சற்று கழித்து அடுத்தது. நிதானமாக படிக்க வேண்டிய வகை.இந்த புத்தகத்தை பற்றிய என்னுடைய பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை புத்தக விமர்சனம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. விமர்சனம் செய்யும் அளவு எனக்கு வாசிப்பனுபவமோ,முதிர்ச்சியோ இல்லை.இவைகளை என்னுடைய சொந்த கருத்துகளாக மட்டும் கொள்க.

ஆரம்பமே அனல் பறக்கிறது. போக்ரான் பாலைவனத்தை பற்றிய வர்ணனையோடு ஆரம்பமாகும் முதல் அத்தியாயம் முழுதும் ஏதோ திரில்லர் படம் பார்ப்பதை போன்ற உணர்வு. "அணு ஆயுத சோதனை" ப்ரொஜெக்டில் என்னவாக இருந்தீர்கள் கண்ணன்? கூடவே இருந்து பார்த்த மாதிரியான ஒரு விவரிப்பு. Brilliant.

எந்த ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போதும் கண்டிப்பாக தேதி குறிப்பு,பெயர்குறிப்புகள், சூப்பர் சோனிக்,ஹோவர்க்ராப்ட்,ஸ்பிட்ஃபியர் என்று விமானங்களை குறித்த தகவல்கள் என்று 248 பக்கங்களும் data,data and data. கலாம் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல் தேவை ஏற்படின், கூகிள் பண்ணுவதற்கு முன்னால், 'இந்த ச.ந.கண்ணன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா பார்ப்போம்'என்று தேடலாம். தான் பகிர்ந்திருக்கும் தகவல்களுக்கு disclaimer ஆக ஏராளமான புத்தகங்கள்,பேட்டிகள்,சுட்டிகள் என்று கடைசியில் ஒரு பெரிய லிஸ்ட் தந்தும் இருக்கிறார்.கலாம் அவர்களுக்கு inspiration ஆக இருந்த புத்தகங்களில் இருந்தே ’இதுவும் கடந்து போகும்' மாதிரியான (நிகழ்வுக்கு பொருத்தமான) மேற்கோள்கள் காட்டி இருப்பது புத்திசாலித்தனம்.

ஹீரோ அப்துல் கலாம் தான் என்றாலும், ஆசிரியரின் horizon சற்று அகன்றதாகவே தான் இருக்கிறது. New Horizon?...:-). சிவானந்த சுவாமிகள், கணித மேதை ராமானுஜர் என்று ஆங்காங்கே நிறைய கதை சொல்கிறார். பறவை எப்படி பறக்கிறது, செயற்கைக்கோள் எப்படி வேலை செய்கிறது முதலான அறிவியல் விளக்கங்கள் கூடவே. இஸ்ரோ உருவான கதை, கதிரியக்கத்தினால் ஹிரோஷிமா நாகசாகியில் விளைந்தது என்ன? முதலான நிகழ்வுகளையும் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

புத்தகத்தின் அத்தியாயங்கள் பிரித்திருப்பது கவனமாக கையாள பட்டு இருக்கிறது. தலைவாழை விருந்து மாதிரி சாம்பார் முடித்து ரசம், பிறகு தான் மோர் என்று வரிசையாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தாலி மீல்ஸ் மாதிரி. பிடித்ததை முதலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நான் பொருளடக்கம் பார்த்ததும் முதலில், "சோனியா-கலாம் என்ன நடந்தது? " என்று 201 ம பக்கத்துக்கு தான் போனேன். ஒவ்வொரு அத்தியாயமும் தனி தனி கட்டுரைகளாவும் வாசிக்கும் அளவுக்கு தேர்ந்தவை.

சமுதாயத்தின் பெரும்பான்மையினரால், வெற்றியாளராக மட்டுமே அறியப்பட்ட ஒருவரின் தோல்விகளையும், துவள வைத்த சம்பவங்களையும் சாமர்த்தியமாக சொல்லி இருப்பதற்கு சபாஷ்.முதல் எஸ்.எல்.வி கடலில் விழுந்ததும், நந்தி ஹோவர் முடங்கியதும் படிப்பவர்களை ’அச்சச்சோ’ சொல்ல வைக்கும். அக்னியின் முதல் இரண்டு முயற்சிகளும் தோற்றதை பற்றிய கேலி கார்டூன்களை பற்றிய குறிப்புகள், அந்த கார்டூன்களுக்காக கூகிள் பண்ண வைக்கும்.

"'கலாமு'க்கு ராமேஸ்வரத்தில் ஒரு 'சிவசுப்ரமணிய ஐயர்' கிடைத்தது போல, ராமநாத புரத்தில் ஒரு 'அய்யாதுரை சாலமன்' கிடைத்தார்" என்று சந்தர்ப்பவசமாக நடந்த சம்பவங்களை கூட, சுவாரஸ்யமான வரிகளாக மாற்றியிருப்பது அழகு.

"பொற்கொல்லர் தன் சொந்த மகளுக்கு நகை செய்யும் போது கூட, அதில் சற்று ஆட்டையை போடுவார். அது அவருடைய தொழில் தர்மம்" என்று சொல்வார்கள். அது மாதிரி தன்னுடைய புத்தகத்தில் கூட ஆங்காங்கே தன் சொந்த அரசியல் கருத்துகளை 'subtle ' ஆக தூவி இருக்கிறார். "ராமர் கட்டிய பாலம் இனி இங்கு தேவை இல்லை" யாம். ஒரு ரூபாய் அரசியல்வாதிகளையும் லேசாக உரசி இருக்கிறார்.

ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசு தலைவர், இந்நாள் ஆசிரியர், இவரை பற்றிய புத்தகம். முழுக்க முழுக்க சீரியஸாக தான் இருக்கும்,முகத்தை உம் என்று வைத்து கொண்டு தான் படிக்க வேண்டியதாக இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை. வெடிச்சிரிப்பு வரா விட்டாலும் 'கோத்தாரியும் நேருவும் அறிவியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்தது முதலான' புன்னகைக்கு மினிமம் கேரண்டி தரும் இடங்கள் பல.

தகவல்களும் புன்னகையும் தானா? செண்டிமெண்ட்? இருக்கிறது. போலியோவால் பாதிக்க பட்டவர்களுக்கு கலாம் செய்த காலிப்பர், முக்கியமான தருணங்களில் அவருடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம் என்று நெகிழ வைக்கும் விஷயங்கள், ஆனால் உறுத்தாத அளவில்.

கடவுளை நம்புகிறீர்களா? என்பதற்கான கலாமின் பதிலும், முஷாரப் கலாம் சந்திப்பின் முடிவில், முஷாரப் கலாமிடம் சொல்லும் வரிகளும் 'நச்'கள்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலாம் சொல்லும் பத்து பத்து உறுதி மொழிகளும், இரண்டு "Ten commandments" களுக்கு சமானம்.

எஸ்.எல்.வி-3 ஏவுகணை, ரோகினி 1B launching காட்சிகள் விவரிப்பின் முடிவில், கலாமை தோளில் தூக்கி வைத்து கொள்ளும் shaar ஊழியர்களுள் ஒருவராக நாமும் மாறி போகிறோம்.

ஒரு குடியரசுத்தலைவராக கலாம் சந்தித்த தர்மசங்கடமான சிக்கல்கள் பற்றி சொல்லி இருக்கிறார். தேர்தல் சீர்திருத்த தீர்ப்பு, பீகார் சட்டமன்ற கலைப்பு, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பதவி வகிப்பது குறித்த சட்டம், அப்சல் கருணை மனு முதலான விஷயங்களில், ’அந்த நிலைமையில் கலாம் வேறு எதும் செய்திருக்க இயலாது’ என்பதை போன்ற விளக்கங்கள்.

திருஷ்டி பொட்டுகள் சில கண்ணில் பட்டன. ஒரு பொட்டை பற்றி மட்டும் சொல்கிறேன். ஜமீலாவின் முகூர்த்தத்துக்கு இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கின்றன. கலாம் டி ஆர் டி ஓ வில் இருக்கிறார். ஏவுகணையில் சென்றால் தான் அவ்வளவு விரைவாக ராமேஸ்வரம் போய் சேர முடியும் என்கிறீர்கள். ஆனால் கலாம், மாலை வரை ஒரு திட்ட அறிக்கை வேலை செய்து முடித்து, சமர்ப்பித்து,அதற்கு பிறகு ஒரு ஹெலிகாப்டர் பிடித்து சென்னை வந்து, அங்கிருந்து விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து ரயில் பிடித்து ராமேஸ்வரம் போனதெல்லாம் சரி. ஆனால் சரியான நேரத்தில் திருமணத்தில் கலந்து கொண்டார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். குழப்புகிறீர்களே கண்ணன்? உண்மையை சொல்லுங்கள். கலாம் ஜமீலாவின் திருமணத்திற்கு சரியான நேரத்தில் போனாரா இல்லையா?

கலாம் பற்றிய புத்தகம் என்பதால் அவர் சிரித்துக்கொண்டோ, யோசித்துக்கொண்டோ இருக்கும் close-up shot தான் அட்டை படத்தில் போடுவதற்கு பொருத்தம் என்றாலும், அக்னிசிறகுகள் அட்டையை யோசித்து இங்கு சற்று வித்தியாசப்படுத்தி இருக்கலாமோ? புத்தக கண்காட்சியில் மேலோட்டமாக பார்ப்பவர்கள், "ஏற்கனவே வாங்கியாச்சு" என்று நினைத்து விடும் ரிஸ்க் இருக்கிறது.

"அக்னிசிறகுகளில் இருந்து உங்கள் புத்தகம் எந்த விதத்தில் வேறுபடுகிறது?" என்று நூலாசிரியரிடம் கேட்டதற்கு
"தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்தில் கூட கலாம் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு கிடையாது. அந்தக் குறையை இந்தப் புத்தகம் போக்கியிருக்கிறது" என்கிறார்.

பா.ராகவன் அவர்களின் twitter கமென்ட்:"ச.ந. கண்ணனின் அப்துல் கலாம் பற்றிய புத்தகம் துதி மாலைகளை விலக்கி அவரைச் சற்றுத் தள்ளி நிறுத்தி அழகாக எடை போடுகிறது"

My verdict: An educating book.

புத்தகததை பற்றிய எனது கருத்துகள் இட்லிவடையில் வெளிவந்துள்ளது.
வேண்டுகோளை ஏற்று பிரசுரித்த இட்லிவடைக்கு நன்றி. நன்றி.நன்றி.

Wednesday, 11 November 2009

ஒரு சந்திப்பு, ஒரு சினிமா, ஒரு புத்தகம், கொஞ்சம் டிவி.

இது ஒரு time-pass பதி(கிர்)வு.
******************************
சில வருடங்களாக அமெரிக்காவில் இருந்து வரும், நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலம் பேசும் போது அமெரிக்க accent வருகிறது அவர்களுக்கு. Father is like faedher, People is like Peeble, Water is like Wader.

"Coca cola கொடுத்தால், "Sorry, we dont drink Soda" (soda is like Sodae)என்று சொல்கிறார்கள்.

"என்னது சோடாவா? எங்க ஊருல சோடான்னா பச்சை கலர் பாட்டில்ல கோலிகுண்டு போட்டு இருக்கும். சோடா குடிக்கும் போது அந்த கோலிக்குண்டு சோடா பாட்டில் மூடி வரை வந்து டக் ன்னு இடிக்கும் ஆனா வெளிய வராது. ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்" சொல்ல நினைத்தேன்.

ஆனால் சொன்னது - "சரி சோடா வேணாமா? தண்ணி தரேன்."

நான் கூட சில நாட்களாக, accent கற்று கொண்டு Fletcher மாதிரி (ச்சி...தா...ம்ரம்) பேசலாமா ன்னு யோசிக்குறேன்.

*******************************
கல்லூரி படத்தில், சோகம், கோபம், கருணை, காதல், possessiveness என்று எல்லா உணர்வுகளையும் வெகு நேர்த்தியாக பிரதிபலிப்பார்.பளீர் கலர். Sleek. தமன்னாவை ரொம்ப பிடித்தது. பாய்ஸில் சித்தார்த் தான் ஹீரோன்னாலும், "பாபு கல்யாணம் அப்டிங்கற பேரை 'பாப் கேலி' ன்னு மாத்திக்கிட்டு அலப்பறை பண்றானே, என்னம்மா dance ஆடுறான்"னு யோசிக்க வெச்சார் பரத்.
'கண்டிப்பா பாரு உனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று நண்பர்கள் ஏகத்துக்கு build-up குடுத்த படம் Jab we met. இப்படி மூன்று விஷயங்கள் கலந்து கட்டி இருக்கிறதே என்று படு எதிர்பார்ப்புடன் 'கண்டேன் காதலை' பார்க்க போனோம். பொதுவாக எனக்கு ரீமேக் படங்கள் பார்க்குறப்போ ஒரிஜினல் தான் நல்லா இருந்த மாதிரி இருக்கும். இது வரை பார்த்த ரீமேக் படங்களில் "இது ஒரிஜினல் விட நல்லா இருக்கே" என்று 'அட' போட வைத்தது போக்கிரி மட்டும் தான். அதற்கும் முக்யமான காரணம் "பாடி ஸ்டூடா" track (எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்). ஆனானப்பட்ட அமீர்கான் நடித்தும் ஹிந்தி கஜினி பிடிக்கலை. To me,Sanjay Singhania was not even 10% of Sanjay Ramasamy. So, இந்த படம் பற்றி சொல்லவே வேண்டாம்.Not even 1% of the original.பேரரசு, திருமுருகன் ஹீரோக்களுக்கு பரத் நல்லா பொருந்துவார். But கோட்,சூட் போட்டு, டை கட்டி, CEO ஆக வரும் காட்சிகளில், பாவமாக இருக்கிறது. இடைவேளை வரைக்கும் தமன்னா (சின்மயி குரலில்) பேசிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு அப்றோம் பரத் பேசறார். Titanic படம் பாத்துட்டு தியேட்டர் விட்டு வெளில வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு மழைல நனைந்த மாறி ஒரு உணர்வு இருக்கும். இந்த படம் முடிச்சு வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு யாரும் பேசாம இருந்தா நல்லா இருக்குமேன்னு இருக்கு.

*****************
Dan Brown விழுந்து விழுந்து படிச்ச நாட்களில், உறவினர் ஒருவர், நீ "Paulo Coelho" படித்ததில்லை. அதை படித்தால் டேன் ப்ரோவ்னை தூக்கி போட்டுடுவ" என்று சொன்னதுடன் "The Devil and Ms Prym" புத்தகத்தை வாங்கியும் கொடுத்தார். தலைப்பை பார்த்ததும் ஏதோ பேய்க்கதை என்று நினைத்து படித்துவிட்டு இங்க சொல்லலாம் என்று தான் பேய்க்கதை சொல்கிறேன் என்று சொன்னேன். ஆனால் 'சரி இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை' என்று வேலைக்கு போகும் பெண்களை பற்றி எழுதி விட்டேன்:-)
Book பாதி படித்து இருக்கிறேன். "All human are eventually evil, its only a matter of when they get the chance" என்று சவால் விடும் ஒருவன், பல காலமாக monotonus வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு கிராம மக்கள், "அந்த கிராமத்தில் இருந்து எவனாவது தன்னை கல்யாணம் பண்ணி கூட்டி போய் விட மாட்டானா என்று" ஒரு life-upgrade எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒரு பெண் என்று அழகாக முடிச்சு விழுந்து இருக்கிறது. எப்டி அவிழ்கிறது என்று பார்ப்போம்.

*****************************
பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகளை காதுகளால் மட்டுமே பார்க்கிறேன். 'Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர்-2' அவ்வளவாக follow பண்ண முடிவதில்லை. அவ்வப்போது பார்க்க நேர்ந்த போதும், "இதென்ன பாட்டு போட்டியா? இல்லை நடன நிகழ்ச்சியா" என்று தோன்றியது. குழந்தைகளுக்கு ஏகத்துக்கு மேக்கப், Chocolate மழையாக கொட்டுறது, குடும்பத்தையே மேடைக்கு அழைக்குறதுன்னு நிறைய stunts.Super Singer is too spoilt. வீட்டில் எல்லாரும் அல்கா என்று பெண் வெளுத்து கட்டுவதாக சொல்கிறார்கள். ஒரு பெண்பிள்ளை டைட்டில் ஜெயித்தால் சந்தோஷம் தான்.
கோலங்கள் சீரியலில் "நான் ஞாபகங்களை தொலைத்து விட்டு நிற்கிறேன்" என்று திருசெல்வன் சொல்லுவது காற்று வாக்கில் கேட்டது. என்ன கொடுமை இது தொல்காப்பியன்? உங்களுக்கு எப்போ ஞாபகம் வந்து, நீங்க எப்போ சீரியல் முடிக்கிறது? மு..டி..ய...ல.

*******************************

With that, wishing each of you to have happy and happening pass time.

Monday, 12 January 2009

கருவாச்சியும் நானும்!!!

கல்லூரியில் படிக்கற வரைக்கும் ஏதாவது புத்தகத்தைப் பாத்தா போதும், அத கைல எடுத்துட்டா சாப்பாடு வேணாம், தண்ணி வேணாம், தூக்கம் வேணாம், டிவி வேணவே வேணாம்.....அந்த புத்தகத்தை கடைசி வரைக்கும் படிச்சு முடிச்சுட்டா தான் 'ஜென்ம சாபல்யம்' அடைஞ்ச மாறி இருக்கும்....அதுக்கு அப்றோம் அவ்ளோ வெறியோட படிக்குறது கொறஞ்சுடுச்சு....நண்பர்கள் ரொம்ப ரொம்ப recommend பண்ற புத்தகங்கள் மட்டும் என்கிற அளவில் என்னுடைய புத்தக உலகம் சுருங்கி தான் போனது....'நேரம் இல்லை' ன்னு சொன்னால் அது ஒரு சறுக்கு மட்டுமே.....நண்பர்கள் "மெயில் பண்ண... போன் பண்ண....மீட் பண்ண.... நேரம் இல்லன்னு" சொல்றப்போ எல்லாம் மனசுக்குள்ள அவங்கள வைது இருக்கேன்...."மனசு இருந்தா நேரம் எல்லாம் நம்மளா உருவாக்கிக்கலாம்" ன்னு நெனச்சு இருக்கேன்.....எனக்கும் அது பொருந்தும் தானே?அதுனால படிக்க நேரம் இல்லன்னு சொல்ல மாட்டேன், 'my prioritieis have changed ' ன்னு உண்மைய ஒத்துக்குறேன்.




இப்படியான என்னுடைய குட்டி புத்தக உலகத்துல,
இப்போ கவிஞரின் கருவாச்சி....:-)..:-(
இந்த இடத்துல நான் படிக்குறதுக்காக சிரிக்குற smiley போடனுமா இல்லாட்டி கருவாச்சி படுற பாட்டை நெனச்சு அழுவுற smiley போடணுமான்னு கொஞ்சம் கொழப்பமா இருக்கு....அதுனால ரெண்டையும் போட்டுட்டேன்.

அர்ஜுன் தூங்கின அப்றோம் நைசா எந்திருச்சு ஹால் க்கு போனா அடுத்த அஞ்சாவது நிமிஷம் ஓஓ ன்னு ஒரு அழுகை சத்தம் கேக்கும்....பயபுள்ள பக்கத்துல அம்மா இல்லன்னு எப்டித்தான் கண்டு புடிக்குறானோ.........
அவன் பக்கத்துலையே நம்ம presence ஐ feel பண்ண வெச்சுகிட்டே சின்ன லைட் வெளிச்சத்துல... அந்த லைட் வெளிச்சம் அவன் மூஞ்சிலயோ,அவங்கப்பா மூஞ்சிலயோ படாம அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டும், கம்பெனி வரப்போ போறப்போ cab லையும்.... இப்டியாக கருவாச்சியும் நானும்....

கவிஞரின் கவிதை தொகுப்புகள் எனக்கு நெறைய உதவி செஞ்சு இருக்கு....
'"இமயத்திற்கும் சரிவு உண்டு இருபுறமும்...இளைய தோழா எழுந்து வா..."
"நீ எறும்பாய் இருந்தால் என்ன? ஊர்ந்து கொண்டே இரு...இரும்பும் தேயும்...." ன்னு அவர் வரிகளை என் பள்ளி நாட்களில் பல போட்டிகளில் பயன் படுத்தி இருக்கிறேன்...
தலைவர் பாரதியும், கவிப்பேரரசும் என்னோட ஸ்கூல் competition prizes க்கு எல்லாம் ராயல்டி claim பண்ற அளவுக்கு ஆட்டம் போட்டு இருக்கேன்...:-)

தமிழ் சினிமா பாடல்களை பொறுத்த வரை ரெண்டு ரகமானவர்கள் இருக்காங்கன்னு நான் நெனைக்குறேன்....
ஒரு ரகம் வைரமுத்து ரசிகர்கள், மறுரகம் தமிழ் சினிமா பாட்டு கேட்காதவர்கள் / புரியாதவர்கள் .
உண்மையில் அவருடைய வார்த்தை விளையாடல்களுக்கு மயங்காதவர்களை நான் இன்னும் சந்தித்ததில்லை....
எந்த ஒரு உணர்வுக்கும், உறவுக்கும் உயிரோட்டமுள்ள எழுத்து வடிவம் கொடுக்க முடிந்தவர். தமிழ் படித்த கவிஞரின் trendy technical language ம், ஒட்டு மொத்த காமத்துப் பாலையும் ஓரிரு வரிகளுக்குள் திணிக்க முடிந்து விடும் திறமையும் நான் மேற்கோள் காட்டி ஞாபகப் படுத்த வேண்டிய அவசியம் அவரை படிக்கும், கேட்கும் யாருக்கும் இருக்க போவதில்லை....
ஆனால் கவிஞருக்கு "சமுத்திரம் கடக்க ஆசை பட்டவன் நான்...ஒரு சிப்பிக்குள் நீச்சல் அடித்து கொண்டு இருக்கிறேன்" ன்னு தன்னுடைய தேடல் சினிமாவில் முடங்கி இருப்பதாக ஒரு குறை உண்டு....அந்த தேடலுக்கு வடிகாலாக அவருடைய படைப்புகளில் ஒரு முழுமையை கொண்டு வர முயற்சிக்கும் தீவிரம் கருவாச்சியிலும்....

தண்ணீர் தேசத்திலும், கள்ளிக்காட்டிலும் எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கண்டு, அறிந்து, அனுபவித்து எழுத்தில் கொண்டு வந்தாரோ அதே மாதிரி இங்கயும் ஒவ்வொரு விஷயத்தையும் வெறும் ஏட்டறிவை கொண்டு எழுதாமல், கண்டு கேட்டு அனுபவித்து எழுதி இருக்காரு......
கள்ளிக்காட்டில் பேயத்தேவர் ஒரு பசுவுக்கு பிரசவம் பார்க்கறப்போ, இங்க படிக்கறவங்களோட தொண்டைக்கும் வயித்துக்கும் ஏதோ ஒண்ண அடைக்க வெச்சவரு, இங்க ஒரு படி மேல போயி, கருவாச்சிய அத்துவான காட்டுல தன்னந்தனியா பிரசவிக்க விட்டு, கருவாச்சி பெத்து பொழச்சதும் படிக்குற நமக்கு வயித்துச் சுமை இறங்கிட்ட மாறி பெருமூச்சு வரவழைக்குறாறு.
கருவாச்சி கருவாட்டு கொழம்பு வைக்கும் போது நமக்கு நாக்கு ஊருது....
கருவாச்சிக்கு அவங்கம்மா உடம்பு பிடிச்சு விட, நமக்கு சொகமா இருக்கு....இப்டி காவியம் முழுக்க அவரோட ராஜ்யம்....

ஆனா அத்தியாயத்துக்கு அத்தியாயம் கருவாச்சி படும் கஷ்டங்கள் தாங்க முடியலை....பக்கம் பக்கமா அவள பாடாப்படுத்தி வெக்குறப்போ "சொல்லுங்க கவிஞரே! what next is waiting for her????" ன்னு ஒரு அலுப்பு வருது...அலுப்பு ன்னு சொல்லுறதுக்காக வைரமுத்து maniacs என்னை மன்னிக்கட்டும்....I myself is one by the way.

தமிழ் ரோஜாவையும், கலைவண்ணனையும் உயிரோட கரையேத்தி, தண்ணீர் தேசத்தை கண்ணீர் தேசமாக்காமல், புண்ணியம் சேர்த்துக்கொண்ட கை தான், பேயத்தேவரைக் கொன்று போட்டு மொக்கராச அனாதையா ஆக்கிச்சு....கருவாச்சில இன்னும் ஒரு முப்பது பக்கம் பாக்கி இருக்கு.......என்ன பண்ண காத்துருக்காரோ கவிஞர்????