Saturday, 25 July 2009

ட்ரிங்! ட்ரிங்!

பயண தொடர் முடியும் வரை வேற எந்த பதிவும் எழுத கூடாது, அது அந்த தொடரின் continuity யை கெடுத்துடும் என்ற முடிவோட தான் இருந்தேன்.
ஆனால் இன்றைக்கு அந்த முடிவை மாற்றியது ஒரு டெலிபோன் கால்.


வெள்ளி இரவு, நானும் அர்ஜுனும் மட்டும் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய நிலைமை. துணைக்கு தம்பி வந்து இருந்தான். பக்கத்து அறையில் அவன் கதவை அடைத்து கொண்டு படுத்து விட, அர்ஜுனை தூங்க வைத்து, பிறகு இணையத்தில் பொழுதை கழித்து, பிறகு டிவி பார்த்து...என்று படுக்கும் போது கிட்ட தட்ட இரண்டு மணி. அடுத்த மூணு மணி நேரத்தில் ஒரு ரகளை நடக்க இருப்பதை கொஞ்சமும் எதிர் பார்க்காமல் தூங்க போனேன்.

பொதுவாகவே எனக்கு அதிகாலையில் வரும் தொலைபேசி அழைப்புகள்
என்றால் அலர்ஜி. அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கு. அர்ஜுன் பொறந்த பிறகு, "அவன் காலங்கார்த்தால தூக்கம் கலைந்து எழுந்தால் ரொம்ப படுத்துவான்" என்பதே அலர்ஜிக்கான முதல் காரணம் ஆகி போனது.

சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணி. வீட்டு landline போன் அலறியது கேட்டு, பதறி அடித்து எழுந்து ஓடிய நான், என்ன ஏது என்று உணர்வதற்குள் ஏதோ தடுக்கி கீழே குப்புற விழுந்து கிடக்கிறேன். சற்று நேரம் அதீத வலியை தவிர வேறு எதுமே நினைவில்லை. கத்த வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர சுத்தமாக குரல் வர வில்லை. நான் விழுந்த சத்தத்தில் எழுந்து விட்ட அர்ஜுன், நான் இப்டி விழுந்து கிடப்பதை பார்த்து "அம்மா பயமா இருக்கும்மா எந்திரிங்கம்மா" என்று அழுகிறான். இருக்கிற சக்தியை எல்லாம் திரட்டி எழுந்து அவன் பக்கத்தில் போய் படுத்து கொண்டேன். உடல் முழுக்க வலி பரவுகிறது. அவன் தூங்கி விட்ட பிறகு எழுந்து வந்து என்ன(வெல்லாம்) ஆகி இருக்கிறது என்று பார்த்தால், விழுந்த வேகத்தில் கட்டில் மோதி முகத்தில் இடது பாதி செவ செவ என்று ரத்தம் கட்டி போய் இருக்கிறது. ரெண்டு கை முற்றிலும் நல்ல சிராய்ப்பு. தம்பிய எழுப்பி விவரம் சொல்லி, etc etc.

கொடுமை என்னன்னா கடைசில அந்த போன் கால் attend பண்ணவே இல்லை நான்.
அர்ஜுனும் முழிச்சுட்டான். முகம் வீங்கியது தான் மிச்சம் எனக்கு.

-என்ன நீங்க இப்போதெல்லாம் அதிகமாக gChat பேசுவதே இல்லை?
சனிக்கிழமை morning கண்டிப்பாக chat செய்கிறேன்.

-Priya, Your feature test execution status is 50%. Its good though, we need to achieve 100% by 8/August.
Ok, I shall work over the weekend.

-ப்ரியா, saturday நம்ம ஆபீஸ்ல family day, நீ உன் husband கொழந்தை எல்லாம் கூட்டிட்டு வரியா?
இல்லப்பா, நான் weekend work பண்ணனும்.Kathir is out of station too. But உன் familyya கண்டிப்பா meet பண்றேன்.

இப்படி ரொம்ப பெருமையா ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி தெளித்து இருந்தேன்.
படு சொதப்பல்.

இந்த பதிவின் நோக்கம், என்னுடைய சோகத்தை சொல்வது அல்ல. infact, நான் சோகமாக இல்லை.

இன்று எனக்கு சில realisation. பகிர்ந்துக்கலாமேன்னு.

-suppose என் தம்பியும் வராமல் இருந்து, எனக்கு பட்ட அடி பலமாக பட்டு இருந்து, நினைவு ஏதும் தப்பி இருந்தால் அர்ஜுனின் கதி? பதினொரு மணிக்கு தான் வீட்டு வேலைகளில் எனக்கு உதவும் ஒரு அம்மா வந்து பார்த்து இருப்பார்கள். அதும் கதவு உள்பக்கமாக பூட்டி இருக்கும். சற்று extreme ஆன thinking தான். ஆனாலும் a very likely case. அதனால் கணவர்களே, மனைவியை தனியா விட்டுட்டு ஊருக்கு போகாதீங்க. மனைவிகளே, தனியா இருக்கும் போது சற்று எக்ஸ்ட்ரா conscious ஆக இருங்க.

-பதிவு எழுதுவதின் மிகப்பெரிய சம்பாத்யம் சுவாரஸ்யமான நண்பர்களும், சுவையான பொழுதுபோக்கும் தான் என்று நினைத்து இருந்தேன். அதை விட பெரிசா ஒண்னு இருக்கு. முன்னாடில்லாம் சின்னதா கொசு கடிச்சுதா கூட, எக்கச்சக்கமா depress ஆயிடுவேன்.ஆனா இப்போ எனக்கு படுற அடிகளையும், ரணங்களையும் கூட ஒரு அனுபவமா பாக்குற பக்குவம் கெடைச்சுருக்கு. "நகத்தை எடுத்தப்போவும், பல்லு பிடுங்கினப்போவும், இன்னைக்கு காலைல விழுந்து கிடந்தப்போவும் ப்ரியாவிற்கு எவ்ளோ தான் வலித்தாலும், பதிவர் ப்ரியா கதிரவன் நடப்பதை எல்லாம் சுவாரஸ்யமாக வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருந்து இருக்கிறாள்" என்பது இன்னைக்கு நான் தெரிஞ்சிகிட்ட அழகான விஷயம்.

With that I wish, May God Be with all of us and Guide us through things that could trip us :-)

Wednesday, 22 July 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 3

22-June. Monday. கோவளம் கிளம்பினோம். நாகர்கோவிலில் இருந்து இரண்டு மணிநேர டிரைவ்.திருவனந்தபுரம் போகும் வழியில் பாலராமபுரம் (மலையாளிகள் பால்ரா என்று சொல்கிறார்கள்) என்னும் ஊரில் இருந்து கோவளத்துக்கு வழி பிரிகிறது. ஆனால் போகும் போது அந்த வழியை மிஸ் பண்ணி, நேரே திருவனந்தபுரம் போய்ட்டோம். அப்றோம் அங்கிருந்து இருபது நிமிட டிரைவ்.


கோவளம் பீச் ஒரு பிரைவேட் பீச் கணக்கா இருக்கு. வெகு சுத்தம்.கூட்டம் கம்மி.
அலை அதிகம். யாராவது மாட்டிகொண்டால் மீட்பதற்கு செக்யூரிட்டி ஆட்கள் அங்கேயே இருக்காங்க. 'நானெல்லாம் தண்ணில வர மாட்டேன்.வேணும்னா கால் மட்டும் லேசா நனைக்குறேன்' இப்டி சொல்லி ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமா உள்ள போய், ஒரு பெரிய அலையில் தடுமாறி கடலில் விழுந்தேன்.
(இனிமே கடலில் குளித்து இருக்கிறீர்களா என்று கொக்கிகாய்ச்சல் கேள்வி வந்தா, ஆமா ன்னு answer பண்லாம்.) விழுந்த என்னை அப்டியே அலை இழுத்துக்கொண்டு போக, என்னை கைபிடித்தவர் கை கொடுத்து தூக்கி விட்ட படி,

'உன்னை அப்டியே விட்டுட்டு அர்ஜுன் க்கு வேற நல்ல அம்மா ரெடி பண்ணிருக்கலாம்'.

'அட பாவமே அந்த கஷ்டம் இன்னொரு பொண்ணுக்கு வேணாம்'

பெரியவர்கள் குழந்தைகள் யாரையும் கூட்டி போகாமல் கதிரும் நானும் மட்டும் போனதால், கேட்க ஆளில்லை, நம்மள கேட்பதற்கும் இல்லை , நாம கேட்பதற்கும் இல்லை. ஒரு மணி நேரம் கடலில் ஆட்டம். ஊர் திரும்பி, 'களியன்காடு' சிவன்கோயில் விசிட். கதிரின் பெரிய மாமா அங்கே திருவாசகம் பிரசங்கம் செய்வார். 'இங்க முன்னால் ஒரு ஐந்து கால் காளை இருந்துச்சு, அது என்னை பாத்தா வணக்கம் சொல்லும்(?)' ன்னு சொல்றார். ரொம்ப பெரியவர். எனக்கும் கதிருக்கும் திருமணம் நடத்தி வைத்தவர். அதனால "காளை எப்டி பேசும்?" ன்னு எல்லாம் அவர் கிட்ட அபத்தமா கேள்வி கேக்காம தலைய ஆட்டி வெச்சேன்.
அன்று இரவு 'இரவிப்புதூரில்' கதிரோட பெரியம்மா வீட்டில் தங்கிட்டோம்.
zzzzzzzzzzzz.

Tuesday.
மருங்கூர் - இரவிபுதூரில் இருந்து வெகு அருகில் இருக்கும் மலை, மேல முருகன்.
காலையில் எழுந்து கிளம்பி, அர்ஜுனை கிளப்பி, மூச்சிரைக்க மலை மேல ஏறி கோவிலுக்குள் நுழைய முயற்சிக்கும் போது சரியாக மணி பத்து. "இப்போ தான் நடை சாத்திட்டோம்" என்றார்கள். 'திருப்பரங்குன்றத்தில் என்னை பாக்காமலா போனீங்க?' முருகன் கேட்காமல் கேட்டார். "To me, you are everywhere' ன்னு சாத்தின கதவை பாத்து கும்பிட்டுட்டு, கோவிலை சுத்தி வந்தோம்.

'இந்திரனுக்கு சுசீந்திரத்தில் விமோசனம் கிடைத்ததும், இந்திரனுடைய குதிரை 'உச்சைச்ரவா' தனக்கும் விமோசனம் வேண்டியதாகவும், சிவன் 'நீ என் புள்ள கிட்ட போய் கேட்டுக்கோ' என்று சொல்லிட்டதாகவும், அந்த குதிரைக்கு முருகன் விமோசனம் குடுத்த இடம் தான் மருங்கூர் (மருங்கு - குதிரை) என்றும் எழுதி வைத்து இருக்கிறார்கள்.'

சூரசம்கார திருவிழா நடக்கும் இடம் என்று கோவிலுக்கு பின்னால் காண்பித்தார்கள். அங்கே இருந்து கீழ பார்த்தால் கண்ணுக்கு எட்டின வரை தென்னை மரம் தான்.Good view. இப்டி ஊரு முழுக்க தென்னை மரத்தோட வளர்ந்ததுனால தான், சாப்பிடற எல்லாத்துலையும் தேங்காய் அரைச்சு ஊத்தி போட்டு தாக்குறாங்க போல. அட மோரை கூட விடறது இல்ல. அதுல தேங்காய் சீரகம் பச்சமிளகாய் இஞ்சி வெச்சு அரைச்சு புளிச்சேரி.(எங்க அம்மா வீட்டு மோர்குழம்பு கிட்ட தட்ட)

மாங்குளம் - மாமனாரின் குடும்ப கோவில். முத்தாரம்மன். ஒரு பகுத்தறிவுவாதி குடும்பத்தாரின் விருப்பத்திற்காக குலதெய்வம் கோவிலுக்கு போனால், பகுத்தறிவுக்கு பங்கம் வராதாமே? (..:-) :-) smiley போடாம இருக்க முடியலை) '
ஆனால் என் மாமனார் கோவிலுக்கு உள்ள வரலை, 'எனக்கு விவரம் தெரிஞ்சு இப்போ தான் இங்க வரேன்னு' சொல்லிட்டு எங்களை உள்ள அனுப்பிட்டு வெளில உக்காந்து கொண்டார்.
'நானும் கல்யாணம் ஆனதிலேர்ந்து இங்க வந்ததுல்லை.அர்ஜுன் சாக்கு வெச்சு வந்துட்டேன்' - மாமியார்.

அங்கிருந்து நல்லூர். கதிரின் சொந்த ஊரு. பார்க் பண்ற இடத்தில் மடேர்னு இடிச்சு காரில் ஒரு பெரிய dent. ஊர் நினைவாக ஏதாவது வேண்டாமா பின்ன? கதிரோட அத்தை வீட்டில் லஞ்ச். ஒரு குட்டி தூக்கம். சாயங்காலம் இந்த பயணத்தின் most awaited destination. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்.

கோவிலை முழுசா சுத்தி பாக்க ஒரு நாலு மணி நேரம் வேணும். ஆனால் கதிர் குடுத்த டைம் one hour. 'சுத்தி எல்லாம் பின்னொரு நாள் பாக்கலாம், இப்போதைக்கு சாமி மாத்திரம் பாத்துக்கோ', என்று சொல்லி எங்களை(நான், மாமியார், கதிரோட அத்தை பெண், அர்ஜுன்) அனுப்பிச்சுட்டு மாமனாரும் கதிரும் எஸ்கேப். கோவிலில் ஆண்கள் சட்டை அணிந்து வரக்கூடாது என்றெல்லாம் சட்ட திட்டம் இருக்கிறது.

முதலில் ஒரு மரத்தடியில் மூலவர் சந்நிதி. ஆரத்தி பார்த்துட்டு, உள்ளே இன்னுமொரு சந்நிதி. தாண் மால் அயன் என்று மூவரையும் differentiate பண்ண முடியாமல் குழம்பிட்டேன். அங்கே ஒரு அர்ச்சகரிடம் போய், 'கொஞ்சம் எனக்கு தல வரலாறு சொல்லுங்க, அப்டியே மூலவர் சந்நிதில யாரு எங்க இருக்காங்கன்னு கரெக்டா காட்டுங்க, உள்ள இருக்க சந்நிதில லிங்கம் மட்டும் தான் தெரியறது, மத்த ரெண்டு பேரும் எங்க?' - என் மாமியார் சற்று அதிர்ந்து போய்ட்டார். 'அட, கதிருக்கு வாய்ச்சுருக்க பொண்டாட்டிய பாரு' - அவரோட அத்தை பெண்.

அர்ச்சகர் வெகு உற்சாகமா விளக்கினார்.(இந்த கோவிலை பற்றி இணையத்தில் பெரியவர்கள் நிறையா எழுதிட்டாங்க.ஆனாலும் நான் கேட்டதை நான் எழுதுவேன் என் டைரி குறிப்புக்காக)
'இந்த மரம் கொன்றை மரம், இதற்கு கீழே இருக்கிறது மூன்றும் சுயம்பு லிங்கம். ஒன்று சிவன், ஒன்று விஷ்ணு, ஒன்று பிரம்மா, அதுனால இந்த மூலவருக்கு கொன்றையடி தாணுமாலயன்னு பேர். காலையில் நாலரை மணிக்கு பூஜை அப்போ மட்டும் தான் லிங்கங்களை பார்க்க முடியும், அதற்கு அப்றோம் முகங்களை பிரதிஷ்டை பண்ணிடுவோம், உள்ளே சன்னதில நீங்க பார்த்தது ஒரே லிங்கம். அந்த லிங்கம் பிரம்மாவாகவும், லிங்கத்தின் தலையில் இருக்கும் பிறை சிவனாகவும், மேலே இருக்கும் பாம்பு விஷ்ணுவாகவும் இருப்பதாக ஐதீகம். சுசீந்திரம் என்பது இந்திரனுக்கு மோட்சம் அளித்த இடம் என்பதால் வந்த பெயர்" .
ரொம்ப நன்றி ன்னு சொல்லிட்டு இன்னும் உள்ளே போனோம்.
விஷ்ணு மல்லாக்க படுத்த நிலையில் ஒரு சிலை. மறுபடி குழப்பம். ஒருக்களித்து படுப்பாருனுல்ல நெனச்சேன்? பிறகு தான் தெரிந்தது. அவர் படுத்த நிலையில் இருபத்தேழு விதமான போஸ் இருக்காம்.

இதோ வந்தாச்சு. பயணம் தொடங்கியதில் இருந்து 'இந்த இடத்தை எப்டி சமாளிக்க போகிறோம்' என்று படபடப்பாகவே இருந்த இடம்.அழுது தொலைக்க கூடாது என்று ஏகத்துக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டி இருந்த இடம். சுசீந்திரம் ஆஞ்சநேயர் சந்நிதி. பிரம்மாண்டமா,ஆனா சாந்தமா,உடல் முழுக்க செந்தூரம் பூசிக்கிட்டு, பாதம் வரை தொங்கும் வெற்றிலை மாலையும், வடை மாலையுமாக, ஸ்ரீ ராமன் சந்நிதியை பார்த்தவாறு கைகூப்பி நிற்கும் ஆஞ்சநேயரை விட்டு கிளம்ப மனமில்லாமல் போனதற்கு அவர் அவ்ளோ அழகா இருந்தது மட்டும் காரணம் இல்லை.
சுசீந்திரம் கோயில் என் அப்பாவுடன் நான் போன கடைசி இடம். அதுவும் இதே ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்த தான்.

- இன்னும் பயணம் (திற்பரப்பு, பத்மநாபபுரம்)

Saturday, 11 July 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 2

'அடுத்த part போடலையா?'

'போடணுமா வேணாமான்னு யோசிக்குறேன். முதல் part க்கே எல்லாரும் துப்பிட்டாங்க.'

'அதாரு எல்லாரும்? உங்க husband தான் சொல்லிருப்பார்.'

'இல்ல. by the way, அவர் சொன்னா எனக்கு எல்லாரும் சொன்ன மாதிரி தான்.'

'அதுக்கில்ல, உங்களுக்குன்னு ஒரு பத்து பேரு இருப்பாங்களே?'

'அவங்க தான். ரொம்ப திட்றாங்க, ஒருத்தர் என்னன்னா "என்ன இடது கையால எழுதுனீங்களான்னு" கேக்குறாரு. இன்னொருத்தங்க "ஊருக்கு கெளம்பறத மட்டும் வக்கனையா சொல்லிட்டு போங்க, ஆனா திரும்பி வந்து எழுதுற போஸ்ட் ல கோட்டை விட்டுடுங்க" ன்னு சொல்றாங்க. இப்டி மாத்தி மாத்தி திட்டுறத பாத்தா ஏதோ உள்நாட்டு சதியோன்னு ஒரு சந்தேகம் வருது.'

'அவ்ளோ மோசம் இல்ல. நான் ஒரு 5.5/10 மார்க் தரேன்'.

'அட நீங்க அவ்ளோ தாராளமா?'

'ஆனா போஸ்ட் ரொம்ப நீளம். எனக்கு இப்போவே கன்னியாகுமரி போய் சேந்துட்ட மாறி இருக்கு.'

'whatever'

.......

.......

ஆனால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் blah blah blah.
(அட அதுக்காக திட்டின உங்களை எல்லாம் வேதாளம்ன்னு சொல்லுறதா நீங்களே நெனச்சுகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல)


ஜிகிர்தண்டா குடித்து ஒரு வழியா ஆகியிருந்த வயிறோடு, மதுரைய விட்டு கெளம்பும் போது மணி 11:30. திருப்பரங்குன்றம் cross பண்ணும் போது கதிர் திடீர்னு "நானும் அப்பாவும் அர்ஜுனை பாத்துகிட்டு கார்லயே இருக்கோம், நீயும் அம்மாவும் வேணா மேல கோவில்க்கு போயிட்டு வாங்க" ன்னார். "பன்னிரண்டு மணி வெய்யில்ல மலை மேல ஏறணுமா? நடை வேற சாத்திருப்பாங்க, இங்க இருந்தே கோவிலை பாத்து கும்பிடு போட்டுட்டு கெளம்பலாம்" ன்னு சொல்லிட்டோம். "அவ்ளோ தானா உங்க பக்தி?" ன்னு கெளம்பிட்டார். ஆனா முருகனுக்கு செம கடுப்பா ஆகியிருக்கணும். பின்னாளில் நல்லா பழி தீர்த்து கொண்டார். சரி அந்த கதை அப்புறம்.

கதிருக்கு abroad ல கார் ஓட்டலைன்னு எப்போவுமே இருந்த மனக்குறை, மதுரை - திருநெல்வேலி சாலையில் தீர்ந்தது. Four Lane அருமையாக போட்டு இருக்கிறார்கள். நடுநடுவே பழுது பார்க்குறதுக்காக அமைத்து இருக்கும் 'take diversion' களையும், "நீங்க எப்டி ரோடு போட்டு ரூல்ஸ் போட்டு வைத்தாலும், நாங்க எங்களுக்கு பிடிச்ச பக்கம் தான் ஓட்டுவோம்" என்று எதிரில் வரும் 'two-wheeler' களையும்,ஹைவேசில் சர் சர்ன்னு போகும் வண்டிகளை கொஞ்சமும் சட்டை பண்ணாமல், cross பண்ற தைர்யசாலிகளையும் மட்டும் மன்னிச்சுடனும்.

அங்கங்கே பதநீர் விற்றுக்கொண்டு இருப்பதை பார்த்து அம்மா,அப்பா, புள்ளை என்று மூணு பேரும் குஷி ஆயிட்டாங்க. 'நம்மளும் குடிக்கலாம்' என்று ஒரு மரநிழலில் நிறுத்தி, இறங்கியாச்சு. பனை ஓலையில் கப் (தொன்னை மாதிரி அல்ல) செஞ்சு, அதுல பதநீர் ஊற்றி , அதில் நுங்கு போட்டு தந்தார் ஒருத்தர். நாங்கள் இருந்த அந்த பத்து நிமிஷத்தில் கிட்டத்தட்ட முப்பது பேருகிட்ட வியாபாரம் பண்ணார். 'எனக்கு நுங்கு மட்டும் போதும், பதநீர் வேணாம்' என்று சொன்ன என்னை குடும்பமே கட்டாயப்படுத்த(விதி வலியது) ,அதையும் குடித்து வைத்தேன். வயிற்றுக்குள் ஒரு chemical reaction நடந்தது.
1/4 glass ஜிகிர்தண்டா + 1 பனை ஓலை கப் பதநீர் -> தலை சுற்றல், வயிற்று வலி. ஆனா எனக்கு மட்டும் தான். மத்தவங்க எல்லாம் தெளிவா தான் இருந்தாங்க.

கயத்தாரில் ஒரு ஐந்து நிமிஷங்கள் நிறுத்தி கட்டபொம்மன் சிலையை பாத்துட்டு கெளம்பினோம். நடிகர் சிவாஜி கணேஷன் தான் அந்த இடத்தை வாங்கி, கட்டபொம்மனுக்கு சிலை அமைத்ததாக எழுதி வைத்து இருக்கிறார்கள். சிலைக்கும் அவரே தான் மாடல் ஆக இருந்து இருப்பார் போலும்.முன்பெல்லாம் அந்த இடத்துக்கு வருபவர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக அங்கே ஆளுக்கு ஒரு கல்லை போட்டு விட்டு போவார்களாம். 'அதுவே ஒரு மலை மாதிரி குவிந்து இருக்கும்' என்று என் மாமனார் சொன்னார்.திருநெல்வேலியில் லஞ்ச்.
அர்ஜுன் தான் பாவம் வழியெல்லாம் உடல்நிலை அவனை படுத்து எடுத்துடுச்சு. அதிலும் திருநெல்வேலியில் ரொம்பவே சிரமப்பட்டான்.அப்றோம் ஊருல எல்லார் வீட்டுக்கும் அல்வா பாக்கெட். சுட சுட கிடைக்குது.அரை கிலோ பாக்கெட் முப்பத்தஞ்சு ரூபாய். சென்னையில அதே பாக்கெட் எழுபது ரூபாயாம்.

திருநெல்வேலி - நாகர்கோயில் ரோடு வந்து ஒரு மர்ம நாவல் மாதிரி. பயங்கர திருப்பங்கள் நிறைந்தது. கொஞ்சம் பயமா இருந்தது.
"நம்ம ஊர்காரங்க மட்டும் கவர்மென்ட் கேட்டா நிலத்தை குடுக்காம கேஸ் போட்ருவாங்க, எல்லா மொள்ளமாரித்தனமும் தெரிஞ்சவங்க, அதான் இங்க மட்டும்
இன்னும் two Lane ஆகவே இருக்கு."
(கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த மொள்ளமாரித்தனம் பத்தில்லாம் தெரிஞ்சுருக்கலாம். too late) - மனசுல தான் நெனச்சேன், பின்ன இதெல்லாம் வெளியவா சொல்ல முடியும்?

வழியில் 'முப்பந்தல்' ன்னு ஒரு ஊரு. பெரிசா ஒரு அம்மன் சிலை வெச்சு இருக்காங்க, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சேர்ந்து பந்தல் போட்டு பொங்கல் வெச்சதுனால அந்த பேருன்னு, என் மாமனார் சொன்னார்.

ஆராமுழி. ஆரல்வாய்மொழிய அப்டி தான் சொல்றாங்க. இந்த பேர கேட்டதும்,இந்த ஊரை பத்தி தெரிஞ்சவங்களுக்கு சில்ன்னு காத்து வந்துருக்கணுமே?? அட்லீஸ்ட் நெனைக்கும் போது எனக்கு சில்ன்னு இருக்கு.
Windmills.
ஏதோ நாத்து நட்டு வெச்ச மாதிரி, கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் நூத்துக்கணக்குல வெள்ளை வெளேர்ன்னு ஒயரமா, உச்சில பெரிய fan சுத்திட்டு, eye candy தான் போங்க. சுபா, நம்ம இத 'ஆர்ம்ச்டர்டாம்' போயி பாத்தோம், நம்ம ஆராமுழியிலேயே என்ன சூப்பரா இருக்குடீ?southside travel பண்றவங்க கண்டிப்பா ஒரு வாட்டி இந்த ஊருல எறங்கி பாத்துட்டு போங்க.

ஒரு அஞ்சு மணிக்கெல்லாம் நாகர்கோவில்ல கதிரோட சித்தப்பா வீட்டுக்கு போய் சேந்தோம், அவரோட மகனுக்கு தான் கல்யாணம். பாத்ததும் எல்லாரும் கதிரை பாத்து "இவ்ளோ தூரம் டிரைவ் பண்ணி வந்துட்டியே" ன்னு கேட்டுட்டு, அடுத்து என்னை பாத்து "என்ன போனமுறை பாத்ததுக்கு வண்ணம் வெச்சுட்டியே" ன்னு கேட்டாங்க. :-(
இதுக்கு எதுக்கு சோக smiley? கலர் ஆகிருக்கேன்னு தான சொல்றாங்க? ன்னு நெனைச்சா நீங்க ஒரு அப்பாவி. வண்ணம் வெச்சுருக்கதுன்னா வெயிட் போட்டுருக்கதுன்னு அர்த்தம். அங்கே refresh பண்ணிட்டு, "வா நான் உனக்கு எங்க ஊரை சுத்தி காட்டுறேன்" ன்னு கதிர் என்னை கூட்டிட்டு கெளம்பினார். அவர் படிச்ச ஸ்கூல், மாமியார் படிச்ச ஸ்கூல், நாத்தனார் படிச்ச காலேஜ் என்று கதிர் தனியாக Sight-Seeing பண்ண இடங்களின் Site-Seeing...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ...

-இன்னும் பயணம் (கோவளம், மருங்கூர், சுசீந்திரம்)





Saturday, 4 July 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 1

மதுரை பதிவர்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள். பதிவு முடியும் முன் காரணத்தை சொல்லி விடுகிறேன்.




20-June-2009
காலையில் ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் எல்லாரும் இரவு தூங்க போனோம். ஆனால் கிளம்பும் போது மணி 6:23.
கதிரை நான் இதற்கு முன்னால், இவ்வளவு உற்சாகமாக பார்த்தது இல்லை. அர்ஜுன், அத்தை மாமா என்று நாங்கள் எல்லோருமே படு சந்தோஷமாக கிளம்பினாலும், எனக்கு 'முதல் முறை இவ்வளவு லாங் டிரைவ் போறோமே' என்று லேசான ஒரு பயம் இருந்ததை ஒத்துக்கணும். ஓசூர் தாண்டி, அடையார் ஆனந்த பவன் சேரும் போது 8 மணி. அப்போதே பயங்கர கூட்டம். NH இல் பயணிக்கும் எல்லாரும் பசிக்கலைன்னாலும் இங்க சாப்பிடுவார்கள் போலும். தமிழ் நாட்டு டிபன் என்றதும் ஒரே குஷி. இட்லி, பூரி, பொங்கல், வடை, தோசை, காபி என்று பிடி பிடித்து விட்டோம். அங்கே குழநதைகள் விளையாட சறுக்கு, ஊஞ்சல் எல்லாம் வைத்து ஒரு play area, washroom வசதி என்று நல்ல ambience இருக்கிறது. சற்று ரிலாக்ஸ் ஆனதற்கு பிறகு, அங்கிருந்து கிளம்பும் போது மணி ஒன்பது.

ஓசூர்-கிருஷ்ணகிரி வழியில் அரளிப்பூ, ஆவாரம்பூ என்று கலர் கலராக வளர்த்து வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு வெகு அழகாக இருந்தாலும், விஷச்செடியை இப்டி நடுரோட்டில் வைத்து இருக்கிறார்களே என்று நினைத்தேன், சமீபத்தில் ஒரு பத்திரிக்கையிலும் யாரோ இதே கவலையை வெளியிட்டு இருந்தார்கள். வழியில் சுங்கசாவடி என்று இரண்டு இடத்தில் வசூல். இன்னும் இரு இடங்களில் toll booth ரெடி ஆக வில்லை. construction நடந்து கொண்டு இருக்கிறது.
'ரோட்டுல போறதுக்கு கூடவா காசு குடுக்கணும்' என்று அங்கலாய்த்தார் என் மாமியார்.
இத்தனை booth லையும் குடுக்குற காசுக்கு ஒரு train ticket வாங்கிடலாம் போலும் - கணக்கு சொன்னார் மாமனார்.
'T R Baalu, செஞ்ச நல்ல காரியம் இந்த ரோடு தாம்பா, ஏதோ நம்ம ஸ்டேட் க்கு செஞ்சதை கொஞ்சம் வெளிலையும் செஞ்சிருந்தா நல்ல பேரு வாங்கிருக்கலாம்' - இது கதிர்.

லாரி மேல லாரி பாத்து இருக்கீங்களா? நான் பாத்தேன். ரெண்டு லாரி லோடு ஆடுகள். நெருக்கமா ஒண்ணு மேல ஒண்ணு இடிச்சுகிட்டு, நிக்குதுங்க.
'நீங்க மனுஷங்க போற ஜீப் படம் போட்டா, நான் ஆடு போற லாரி படம் போடுவேன்' ன்னு படம் காட்டுறதுக்காக ஒரு போட்டோ எடுத்தேன். படம் தெளிவா வரலை:-(
'இதை பாக்குறப்போ, சைவமா மாறிடணும் ன்னு தோணுது' ன்னு கதிர் சொல்றார்.
'உணவுப்பழக்கம் வேற உணர்வு வேற' என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தாலும், அதை justify பண்ண தோன்றவில்லை. இதே மாதிரி, மாடு போற லாரி, எருமை மாடு (இதையும் சாப்பிடுவாங்களா?) போற லாரி என்று எல்லாம் பாத்தாச்சு அன்னைக்கு.

வெய்யில் ஏற ஏற முன் சீட்டில் இருந்த எனக்கு காட்சி பிழை. கானல் நீர் தெரிகிறது. சட்டென்று கானல் நீருக்கு ஆங்கில வார்த்தை மறந்து போச்சு. வழக்கமாக ஆங்கில சந்தேகங்கள் கேட்கும் இரண்டு,மூன்று நண்பர்களுக்கு sms அனுப்பினேன். சட்டென்று பதில் வந்தது. 'இது கூட தெரியாதா' என்று நினைக்கும் ஆங்கில புலவர்களும், ''அது என்ன வார்த்தை' என்று கூகிள் பண்ணுபவர்களும், பின்னூட்டத்தில் answer சொல்லுங்க.

சேலம், கரூர் வழியா திண்டுக்கல் சேரும் போது மதிய உணவுக்கான நேரம். Bypass ஹோட்டல்களில் சாப்பிட விருப்பமில்லை. அதனால் ஊருக்குள் போனோம். கொஞ்சம் நெருக்கடியான ஊர் தான். இது வரை நல்லா இருந்த ரோடு, திண்டுக்கல் - மதுரை வழியில் மட்டும் மோசம். ஒரு வழியாக மதுரையை சேர்ந்த போது 4:30.

அன்று மதுரையில் தங்கி செல்வதாக இருந்ததால் ஒரு lodge எடுத்து, குளித்து கிளம்பி மீனாக்ஷி அம்மனை பார்க்க போனோம். அன்று பிரதோஷமாக இருக்கவே, செம கூட்டம். வெளியில் பார்வதி யானை, படு அலங்காரமாய் போஸ் குடுக்கிறது. சின்மயி பதிவில் பார்வதியைப் பற்றி ஒரு முறை படித்து இருக்கிறேன். Affordable ஆக இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒரு யானை வளர்த்து இருக்கலாம். அவ்ளோ பிடிக்கும்.

சுந்தரேசர் சன்னதியில், நிற்க இடமில்லை. 'என்னதான் மதுரை என்றாலும் சுந்தரேசர் சன்னதியில் ஒரு fan கூடவா வைக்க கூடாது? எல்லா fan ஐயும் மீனாக்ஷி கிட்டயே போட்டிருக்கிறார்கள்' வேர்த்து கொட்டியபடி புலம்பியவர் உள்ளூராக தான் இருக்கவேண்டும். பெங்களூர் Bannerghatta ரோட்டில், ஒரு miniature மீனாக்ஷி அம்மன் கோவில் போய் இருக்கிறேன், ஆனால் மதுரை மீனாக்ஷியை பார்ப்பது முதல் முறை. பல நாள் ஆசை நிறைவேறியது. பொற்றாமரை குளத்தில், தாமரை மட்டும் தனியே நிற்கிறது. தண்ணீர் இல்லை.கேள்விப்பட்ட மாதிரியே நிறைய பேரு 'வடக்கு வாசல் எப்டி போகணும்?' 'தெற்கு வாசல் இதுவா?' என்று கேட்டபடி சுற்றி சுற்றி அலைந்து கொண்டு இருந்தார்கள். ஆயிரம் கால் மண்டபத்தில் கோவிலின் மாதிரி ஒன்று இருக்கிறது. நிறைய கால்(தூண்)களில் இருந்து சிலைகள் பெயர்ந்து, கீழே படுத்து இருக்கின்றன. அங்கு இருக்கும் நந்தியின் காதில், மக்கள் வரிசையில் நின்று வேண்டியதை சொல்கிறார்கள். ஒரு பெண்மணி ஒரு கையால் நந்தியின் ஒரு காதை மூடிக்கொண்டு, இன்னொரு காதில் ஏதோ சொன்னார். நந்தியும் வாய் மூடி எல்லாத்தையும் கேட்டு கொள்கிறது. மண்டபத்தை சுற்றி நிறைய கடைகள்.
'தாழம்பூ குங்குமம் கிடைக்கும்' என்று கடைக்கு கடை கூவுகிறார்கள். அப்டின்னா என்னன்னு
தெரியலை. நின்னு கேக்க நேரம் இல்லாம வந்துட்டேன். தெரிஞ்ச யாராவது சொல்லுங்க.

பிறகு முருகன் இட்லி சாப்பிட்டு , ஜிகிர்தண்டா குடிப்பதாக போட்டிருந்த திட்டம், அர்ஜுனுக்கு உடம்பு சரி இல்லாமல் போகவே, கைவிடப்பட்டு, கோவில் பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூம்க்கு திரும்பிவிட்டோம்.

மறுநாள் காலை திருமலை நாயக்கர் மஹால். பாம்பே, குரு பாடல்களுக்கு பிறகு, கட்டாயம் இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. 'அர்ஜுனை அலைக்கழிக்க வேண்டாம், நாகர்கோவிலுக்கே போய் விடலாம்', என்று
சொன்ன கதிரிடம், 'மஹால் மட்டும் போய்விட்டு ஊருக்கு போகலாம்' என்று கெஞ்சி, சாதித்தேன். சும்மாவா மணிரத்னம் location செலக்ட் பண்ணுவார்? இந்த மஹால் அவ்வளவு அழகு. ஆனால் இப்போது புதுப்பிக்கும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. 'எங்க government இருக்கும் வரை சுற்றுலாத்துறைக்கு நல்லது' என்று மாமனார் சொல்லிக்கொண்டார். 'இன்னும் ஆறு மாசம் கழிச்சு வாங்க சார், அதுக்குள்ள ஒலி ஒளி காட்சி எல்லாம் மறுபடி ரெடி ஆயிடும்' என்று ஒருவர் சொன்னார். வெளியில் வந்தால் ஒரு கடையில் ஜிகிர்தண்டா கிடைக்கும் என்று போர்டு போட்டு இருந்தது. வாங்கி குடித்தோம். மதுரை மக்களே, இதற்கா இவ்வளவு பில்டப்? குளிர்ந்த பாலில், ஷர்பத், பாதாம் பிசின் என்று ஒன்று (பாதாம் மரத்தில் இருந்து எடுப்பதாம், transparent ஆக கொழ கொழன்னு இருக்கு)கலந்து, ஏகத்துக்கு சக்கரை,ice போட்டு தருகிறார்கள். என்னால் குடிக்க முடியலை. மஹால் வாசலில் ஒரு பாட்டி, பாசி, ஊசி, மணி, மாலை எல்லாம் வைத்துக்கொண்டு கதிர் கிட்ட, 'நீ என் பேரன் மாதிரி, ஏதாவது போனி பண்ணிட்டு போ' என்று விடாபிடியாக படுத்த, கதிர் ரெண்டு மோதிரம் வாங்கி எனக்கு ஒண்ணு, மாமியார்க்கு ஒண்ணும் குடுத்தார். பின்னாளில், ஊரில் எல்லாரிடமும், அது எங்கள் குடும்ப மோதிரம் என்று பீற்றிக்கொண்டோம். இப்படியாக மதுரையை விட்டு கிளம்பியாச்சு.
ஆங், மறக்கலை, மதுரையில் பெண்கள் வெகு அழகு. நெற்றியில் அடர்ந்த நிறத்தில் குங்குமம், தலை நிறைய மல்லிப்பூ வைத்து, எந்த நேரமும் பளிச் என்று இருக்கிறார்கள்.

-தொடரும்.







The Grand(slam) Finale !

கேட்டது கிடைக்குமா?

அவசர அவசரமா அய்யன்னாருக்கும், சின்ன கருப்பருக்கும் reminder அனுப்பிட்டேன்.

Wishing Federar Super Good Luck.

Thursday, 2 July 2009

'ராவணா' படத்தில் இருந்து அபிஷேக்பச்சன் நீக்கப்பட்டார்.

இன்று காலை கலைஞர் டிவி பிளாஷ் நியூஸ்.
'ராவணா' படத்தில் இருந்து அபிஷேக்பச்சன் நீக்கப்பட்டார்.
காரணம் என்ன?





நேற்று இரவு 8.30 மணிக்கு 'கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்த இயக்குனர் மணிரத்னம் , "ராவணா" படத்தில் இருந்து அபிஷேக்பச்சனை தூக்கிவிட்டு, இவரை ஒப்பந்தம் செய்ய கோரி உள்ளதாக தெரிகிறது.
அதற்கு இவர், "நான் ஐஸ்வர்யா ராய் கூட நடிக்க மாட்டேன், சுப்ரமணியபுரம் சுவாதி அல்லது குறைந்த பட்சம் பூஜாவையாவது புக் பண்ணினால் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சொல்லிவிட்டதாகவும், மேலும் ஷூட்டிங் பொருட்டு மும்பைக்கு எல்லாம் வர முடியாது, வேண்டும் என்றால் நெய்வேலியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கறாராக சொல்லிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மணி அவர்கள், "நீங்க ஓகே மட்டும் சொல்லுங்க, மற்ற எல்லா கண்டிஷன் க்கும் ஒத்துக்கொள்கிறேன்" என்று கெஞ்சிக்கொண்டு இருப்பதாகவும் செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும் ராவணாவில், ஒப்பந்தம் ஆக போகும் இவரை பார்ப்பதற்காக, பொது மக்கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்ததில், பம்மல் மற்றும் ஆழ்வார்பேட்டை செல்லும் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. இந்த பகுதிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு பெரும் சவாலாக இருப்பதாக, DGP தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்கள் செய்தியை ஊர்ஜிதப்படுத்தினால் நல்லா இருக்கும்.


We, as your readers, are very happy for you. Congratulations.