Monday, 24 August 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 6

ஏழாவது படிக்கும் போது தான் சுவாமி விவேகானந்தரின் அறிமுகம். விவேகானந்தா மிஷன் 'சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்" புத்தகத்தில் இருந்து ஒரு போட்டி நடத்தினார்கள். அப்போதிலிருந்தே சுவாமிஜி என்றால் ஒரு ஆர்வம். என் ஹிந்தி சார் வீட்டில் மூன்றடி உயரத்திற்கு விவேகானந்தரின் சிலை வைத்து இருப்பார்கள். டியூஷன் அப்போ, அந்த சிலைக்கு பக்கத்தில் தான் உக்காருவேன். கன்யாகுமரி விவேகானந்தர் பாறை போக போகிறோம் என்றதும், உற்சாகம் பீறிட்டது.திருவள்ளுவர் சிலையையும் பார்க்க போவது இதான் முதல் முறை.

26-June-2009 2PM

"நாலு மணிக்குள் போகலைன்னா, cruise டைம் முடிஞ்சுடும். அப்றோம் விவேகானந்தர் பாறையை எல்லாம் தூரமா இருந்து பாத்துட்டு வர வேண்டியது தான்" மறுபேச்சு பேசாமல் சொன்ன நேரத்துக்கு ரெடி ஆயிட்டேன்.

"இது தான் மருந்து வாழ் மலை. அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு போகும் போது, அதில் இருந்து கீழே விழுந்த ஒரு துண்டு. இங்க உள்ள கீரைய பறிச்சு சாப்பிட்டால் எந்த நோயும் குணமாகும்"
நாகர்கோயில் - கன்யாகுமரி வழியில்,ஒரு மலையை காண்பித்து அவரோட அத்தை சொன்னது.

உடனே cruise டிக்கெட் வாங்கிக்கொண்டு, ஏறி உக்கார்ந்தோம். கரையில் இருந்து பாறைக்கு செல்ல ஆகும் அதிக பட்ச நேரம் ஐந்து நிமிடம். அதற்குள் இரண்டு வட இந்திய குடும்பங்களுக்குள் சண்டை வந்து விட்டது. எதற்கு என்றால், ஒருவர் துண்டு போட்டு ரிசர்வ் செய்து வைத்து இருந்த இடத்தில், இன்னொருவர் வந்து உக்காந்து விட்டார். அப்பா அப்பாவுடன், அம்மா அம்மாவுடன், அண்ணன் அண்ணனுடன் என்று அவரவர் வயதில் உள்ளவர்களுடன் வாய்ச்சண்டையில் ஆரம்பித்தது கைகலப்பில் முடிய இருந்ததற்குள், இறங்க வேண்டிய இடமே வந்து விட்டது.
"சாலா" "பாகல்" என்றெல்லாம் திட்டிக்கொள்கிறார்களே? அப்டின்னா என்ன?" கேட்டது அவரோட அத்தை பெண்.

முதலில் கன்யாகுமரியின் நினைவகம். ஒரு ஜோடி பாத அடையாளங்களை கண்ணாடி சட்டம் போட்டு வைத்து இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் எல்லாம் அதன் மீது காசு எறிகிறார்கள்.
"कौन है कन्याकुमारी? उसकी बाप कौन है?" கேட்டுக்கொண்டே காசை போட்டது சண்டை போட்ட குடும்பத்து பெண். அப்போது தான் கவனித்தேன். அங்கு குமரியின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் மாத்திரம் தான் எழுதி வைத்திருக்கிறார்கள்.விளைவு? குமரியின் அப்பா யாருன்னு கேட்கிற அவலம்.ஹிந்தியிலும் எழுதி தொலைத்து இருக்கலாம்.

விவேகானந்தர் பாறையின் சிறப்பம்சம் அங்கிருக்கும் சுத்தமும், அமைதியும் காற்றும் தான். அங்கு வரும் சுற்றுலா பயணிகளும், ஒரு ஒழுங்குக்கு வந்து விடுகிறோம். யாரும் குப்பை போடுவதில்லை, எச்சில் துப்புவதில்லை, தேவையில்லாத சத்தம் இல்லை. இத்தனைக்கும் நல்ல கூட்டம் வேறு. சண்டை போட்ட அந்த குடும்பங்கள் கூட, ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்ள வில்லை. குமரியின் பாத தரிசனம் முடிந்து, விவேகானந்தர் மண்டபத்துக்குள் நுழைந்தோம். தாஜ்மகாலை சினிமாக்களில் பார்த்து விட்டு, முதல் முறை நேரில் போகும் போது, "அட இவ்ளோ பெரிசா" என்று தான் முதலில் பிரம்மிப்போம். அதே தான் இங்கேயும். ஏற்கனவே சின்ன வயசில் பார்த்து இருந்தாலும் கூட, இந்த முறை "இவ்ளோ பெரிசா" என்று ஒரு ஆச்சர்யம் முதலில் ஏற்பட்டது. முதலில் ஒரு பெரிய அறை. அங்கே பளபளவென்று சுமார் பத்து பன்னிரண்டு அடி உயரத்தில் சுவாமிஜியின் சிலை. ஒருவர் அங்கே வருபவர்களை எல்லாம் பேசாதீர்கள் என்று செய்கை செய்த படி தூண்களை எல்லாம் துடைத்து கொண்டு இருந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டும் என்ற ஆவலை அடக்கி கொண்டேன்.

அடுத்து தியானம் செய்யும் அறை. மெல்லிய வெளிச்சத்தில் ஓம் ஓம் என்ற மிக மெல்லிய ஒலியின் பின்னணியில், ॐ என்று எழுத பட்டு இருக்கும் ஒரு திரையை நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறார்கள். தியானம் செய்தோமா என்றெல்லாம் தெரியாது ஆனால் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு வெளியே வந்தோம்.

ஒரு கடை வைத்து விவேகானந்தர் சிலை, சிற்பம், புத்தகம் என நினைவுச்சின்னங்கள் விற்பனை செய்கிறார்கள். "Swamy Vivekananda on himself" என்று ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டேன். விவேகானந்தர் பாறையில் இருந்து பார்த்தால் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக நிற்கிறது வள்ளுவன் சிலை. அங்கே போவதற்கு படகு போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றம் தான்.

அடுத்ததாக குமரியம்மன் தரிசனம். அம்மனின் மூக்குத்தி தான் விசேஷம். கப்பல்களுக்கு எல்லாம் கரை காட்டும் விளக்காக இருந்ததாம் இந்த மூக்குத்தி. உண்மையில் ஏதோ விளக்கொளி சுடர் விடுவதைப்போல மின்னுகிறது.

கடற்கரையில் 'பொங்கி வரும் கடல் அலையை ஒரு கை தடுப்பதை' போன்று சுனாமி நினைவுச்சின்னம் அமைத்து இருக்கிறார்கள்.

திரும்பி வரும் வழியில் ஒரு குறுகலான சந்தில் பார்க் பண்ண போக, காரில் அடுத்த டென்ட். கண் திருஷ்டி.இந்த முறை தடம் பலம்.:-(

27-June-2009
அடுத்த நாள் சனிக்கிழமை,மாமியாரின் குடும்ப கோயில் விசிட். சில உறவினர்களை சந்தித்தோம். திருமணத்துக்கு முன்பு வரை எனக்கு ரஸ்தாளி, பூவன், கற்பூரவல்லி, பச்சை பழம் என்று வாழைப்பழ வகைகள் தான் தெரியும். அப்பறம் தான் பேயன், மட்டிப்பழம்,சிங்கம்பழம், செந்துளுவன் இதெல்லாம் தெரிய வந்தது. மற்ற ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களை மட்டும் தான் பெயர் சொல்லி சொல்கிறார்கள். மற்றபடி பழம் என்றாலே வாழைப்பழம் தான். காலை காப்பியில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை, எல்லா உணவுடனும் வாழைப்பழம் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அன்று மாலை ஒரு செட் ஊருக்கு கிளம்பினார்கள். விடை அனுப்ப railway station போன இடத்தில் குழந்தைகள் ஒன்றை ஒன்று கட்டி கொண்டு அழுது பிரியா விடை பெற்றன.

28-June-2009
ஞாயிறு அதிகாலை return பெங்களூருக்கு கிளம்பினோம். வரும் வழியில் மறுபடியும் திருநெல்வேலி அல்வா. காலை 7:30மணிக்கு வாங்கின போதும் அதே சூடு. கயத்தாறில் கட்டபொம்மன் சிலைக்கு கீழே உட்கார்ந்து கொண்டு வந்த காலை உணவு, வழியில் கோவில்பட்டியில் ஒரு மர நிழலில் மதிய உணவு. இரவு உணவுக்கு மறுபடி ஆனந்த பவன், என்று ஒரே மூச்சாக இரவு தூங்க வீட்டுக்கு வந்துவிட்டோம். உறவினர்கள், கடல், அருவி, குழந்தைகள், கோவில், திருமணம் என்று ஒரு வாரம் ஓடியதே தெரிய வில்லை.

So how is life now?
"அடுத்த கல்யாணம் எப்போ வரும்? இதே மாதிரி இன்னொரு ட்ரிப் போகலாம்" என்று பார்த்து கொண்டிருக்கிறேன்.

அட கண்ணனும் சஞ்சயும் இப்போ எதுக்கு இப்டி அழுவறீங்க? அப்டி என்ன ஆகி போச்சு? ஒரு தொடர் ன்னு ஆரம்பிச்சா அது முடிஞ்சு தான ஆகும்? இதுக்கு போயி மனச தளர விடலாமா??

......

என்ன அதுக்கு அழுவலையா? பின்ன என்ன?

......

என்னது? இன்னொரு முறை இப்டி ஒரு தொடர் எழுத மாட்டேன்னு சத்தியம் பண்ணனுமா?-பயணம் சுபம்.

No comments:

Post a Comment